தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேரை கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் விடுவித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக அரசு மற்றும் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் எதிர் மனு தாக்கல் செய்தனர். இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய கர்நாடக அரசு மற்றும் திமுக தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், அன்பழகனின் வழக்கறிஞர் வி.ஜி.பிரகாசம் நேற்று உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் பதில் மனு தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக வழக்கறிஞர் வி.ஜி.பிரகாசம், ‘தி இந்து'விடம் கூறியதாவது:
ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு எதிராகவும், வழக்கில் இணைக்கப்பட்டுள்ள 6 தனியார் நிறுவனங்களுக்கு எதிராகவும் தனித்தனியாக பதில் மனு தாக்கல் செய்திருக்கிறோம். கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமியின் தீர்ப்பை ரத்து செய்துவிட்டு, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்; தனியார் நிறுவனங்களை வழக்கில் இருந்து விடுவித்த தீர்ப்பையும் ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளோம்.
இவ்வாறு பிரகாசம் கூறினார்.
வழக்கு விசாரணை வரும் 23-ம் தேதி தொடங்கும் என உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.