இந்தியா

அமீர் கான் பாகிஸ்தான் செல்லட்டும்: சிவசேனா பாய்ச்சல்

அலோக் தேஷ்பாண்டே

சகிப்பின்மைக்கு எதிராக அமீர் கான் தெரிவித்த கருத்துகள் அவர் மீது கடும் தாக்குதல் விமர்சனங்களை ஈர்த்துள்ளன. தற்போது சிவசேனாவும் அமீர் எதிப்பில் இறங்கியுள்ளது.

இது குறித்து சிவசேனா கட்சியின் மகாராஷ்டிர சுற்றுச்சூழல் அமைச்சர் ராம்தாஸ் காதம் கூறும்போது, “இன்று வரை அவர் கொண்டாடப்படும் ஒரு நடிகாராக இருந்து வருகிறார். ஆனால் இப்போதுதான் புரிகிறது நாம் பாம்புக்கு பால் வார்த்திருக்கிறோம் என்பது. அவர் இங்கு இருக்க விரும்பவில்லை எனில் பாகிஸ்தான் செல்லட்டும்” என்று கூறினார்.

சிவசேனா இதழான சாம்னா தலையங்கத்தில், “நாட்டை விட்டு வெளியேறும் பேச்சு துரோகப் பேச்சாகும். இந்த நாடு அவருக்கு அளித்த பெயரையும் புகழையும் துறந்து விட்டுச் செல்லட்டும்.

அவர் தன் மனைவியின் கூற்றை ஏன் இவ்வளவு கவனத்துடன் பார்க்க வேண்டும் என்பது பற்றியும் நாட்டை விட்டு ஏன் வெளியேற வேண்டும் என்று தோன்றியது பற்றியும் அமீருக்குத்தான் தெரியும்.

இந்தியாவை தன் நாடாக உணராதவர்கள் தேசப்பற்று பற்றியும் ‘சத்யமேவ ஜெயதே’ பற்றியும் பேசக்கூடாது.

பாலிவுட்டில் இருக்கும் கான் நடிகர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது பற்றி பேசி வருகின்றனர். இந்துக் கடவுளர்களை கேலி செய்யும் இவரது பிகே படம் நூறு கோடி ரூபாய் வசூல் குவித்தது, நாடு சகிப்பின்மையில் இருந்ததால் இவ்வளவு பணம் குவித்ததோ?

அமீர்கானும் அவரது மனைவியும் காஷ்மீர் சென்று அங்கு இந்திய ராணுவ வீரர்கள் சண்டையிடுவதைப் பார்க்க வேண்டும். உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமா?” இவ்வாறு சாம்னா தலையங்கம் கூறுகிறது.

புதுடெல்லியில் திங்களன்று நிகழ்ச்சி ஒன்றில் அமீர் கான், கடந்த 6 முதல் 8 மாதங்களாக நாட்டில் மக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வு குறைந்துள்ளது. அச்ச உணர்வை அதிகரித்திருக்கிறது.

வீட்டில் என் மனைவியுடன் நான் பேசிக் கொண்டிருக்கும்போது அவர் என்னிடம் "நாம் இந்தியாவை விட்டு வெளியேறிவிடலாமா?" எனக் கேட்டார். குழந்தைகள் எதிர்காலம் கருதி இவ்வாறு கேட்பதாகக் கூறினார். ஒவ்வொரு நாளும் செய்தித்தாளை திறக்கவே அச்சமாக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

அமீர் கானின் இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவும், எதிர்ப்பும் தொடர்ந்து கிளம்பி வருகின்றன.

SCROLL FOR NEXT