தங்கக் கடத்தல் வழக்கில் சுங்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், இன்று ஆஜராக முடியாது என கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் முக்கியமான அலுவல் பணிகள் இருப்பதால் அடுத்த மாதம் முதல் வாரத்தில் விசாரணைக்கு ஆஜராவாதகவும் அவர் சுங்கத்துறைக்கு கடிதம் மூலம் விளக்கியுள்ளார்.
கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் கேரள அரசியல் முக்கிய புள்ளி ஒருவர், கேரளாவில் இருந்து டாலர்களை வளைகுடா நாடுகளுக்கு அடிக்கடி கொண்டு சென்றதாக வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
அந்த முக்கிய புள்ளி சபாநாயகர் ராமகிருஷ்ணன்தான் என்று கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார். இதையடுத்து ஸ்ரீராமகிருஷ்ணனை ராஜினாமா செய்ய காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தவே, இருமுனைத் தாக்குதலால் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது மார்க்சிஸ்ட் கட்சி.
இந்நிலையில், தங்கக் கடத்தல் வழக்கில் சுங்கத்துறை ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த வழக்கில் ஏற்கெனவே சுங்க இலாகா அதிகாரிகள் முன்பு ஆஜராக சொல்லி சபாநாயகரின் உடன் பயணிக்கும் முக்கிய அலுவலருக்கு இரு முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.