மகா சிவராத்திரியையொட்டி வாயுத்தலமான காளஹஸ்தியில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் நேற்று மகா சிவராத்திரி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. அதிகாலை முதலே சிவன்கோயில்களில் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமியைவழிபட்டனர்.
இந்நிலையில், பஞ்ச பூத திருத்தலங்களில் வாயுத்தலமாக விளங்கும் காளஹஸ்தி சிவன் கோயிலில்தற்போது மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற்று வருவதால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகமாக இருந்தது. அதிகாலை 2 மணியிலிருந்தே பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.
நேற்று காலையில் உற்சவ மூர்த்திகள் சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவில் நந்தி வாகனசேவை நடைபெற்றது. மகாசிவாராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி, கோயில் முழுவதும் மேற்கூரைகளில் விதவிதமான பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் முகப்பு கோபுரம், ராஜகோபுரம் உட்பட கோயில் முழுவதும் வண்ண விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோயில் கொடிகம்பம், பலிபீடம் ஆகியவை வெளிநாட்டு மலர்களால் அலங்காரம் செய்யபட்டிருந்தன. சுவாமி தரிசனத்துக்கு வந்த பக்தர்களுக்கு தனித்தனி வரிசை அமைக்கப்பட்டிருந்தது.
மேலும் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருப்பதியிலிருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டதால், வெளியூர் பக்தர்கள் கணிசமான அளவில் சுவாமியை வழிபட்டனர்.