தெலங்கானா மாநிலத்தில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த 6 பேரை மாவோயிஸ்ட்கள் கடத்தி உள்ளனர். மாவோயிஸ்ட்களுக்கு எதிரான போலி என்கவுன்ட்டரை கண்டித்து இந்த செயலில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித் துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம், செர்லா மண்டலம், புசகப்பா கிராமத்தில் நேற்று முன் தினம் இரவு தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த பத்ராசலம் வட்டார செயலாளர் ராமகிருஷ்ணா, செர்லா மண்டல முன்னாள் தலைவர் படேல் வெங்கடேஸ்வர ராவ், மண்டல முன்னாள் செயலாளர் சுரேஷ் குமார், வெங்கடாபுரம் மண்டல தலைவர் சத்யநாராயணா, பாஜேடு மண்டல தலைவர் ஜனார்தன், புசகப்பா முன்னாள் ஊராட்சி தலைவர் ராமகிருஷ்ணா ஆகியோர் கடத்தப்பட்டனர். இது குறித்து கம்மம் மாவட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர் ஜெகன் பெயரில் ஒரு கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், ‘சமீப காலமாக மாவோயிஸ்ட்களை போலீஸார் போலி என்கவுன்ட்டர் செய்து வருகின்றனர். மேலும் பலரை கைதும் செய்து வருகின்ற னர். இதனை இம்மாநில அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும் மாவோயிஸ்ட்களை கம்மம் முதல் ஆதிலாபாத் வரை மலையேறும் பயிற்சி பெற்ற போலீஸார் தேடி வருகின்றனர். இதனையும் உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையேல், தற் போது பிணை கைதிகளாக உள்ள 6 பேரை கொன்று விடுவோம்’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.