இம்மாதம் 14-ம் தேதியில் ஜவாஹர்லால் நேருவின் 125-வது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், நாட்டின் முதல் பிரதமரான நேருவின் புகழை பொதுமக்கள் இடையே புதுப்பிக்க முயல்வதாகக் கருதப்படுகிறது.
முதல் நிகழ்ச்சியாக நாளை தொடங்கி இரு நாட்களுக்கு டெல்லியில் ஒரு மாபெரும் கருத்தரங்கை காங்கிரஸ் நடத்துகிறது. இதில், முதன்முறையாக இடதுசாரி உட்பட அனைத்து தரப்பை சேர்ந்த வரலாற்றாசிரியர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இன்றைய நிலையில் மதச்சார்பின்மை, சுதந்திரம், சம உரிமை மற்றும் ஜனநாயகம் ஆகியவை பற்றி கருத்தரங்கில் பேச இருக்கிறார்கள். இதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைக்க, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருத்தரங்கின் நிறைவு உரையாற்ற இருக்கிறார்.
நவம்பர் 14 அன்று காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் கூட்டத்தில் அதன் தலைவி சோனியா காந்தி உரையாற்ற இருக்கிறார்.
இதற்கு முன்னதாக காங்கிரஸின் சேவா தளம் சார்பில் டெல்லியில் ஒரு ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில், நேருவை பற்றிய இணையதளங்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் புதிதாகத் துவக்கி வைக்கப்பட உள்ளது. அதேநாள் மாலை நாட்டின் பிரபல இசைக்கலைஞர்கள் கலந்து கொள்ளும் பாரம்பரிய இசை நிகழ்ச்சி நேரு பூங்காவில் நடைபெற உள்ளது.