ஹரியாணா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மனோகர் லால் கட்டார் தலைமையிலான ஆளும் பாஜக அரசு வெற்றி பெற்றுள்ளது.
விவசாயிகள் போராட்டத்தால், மாநிலத்தில் ஆளும் பாஜகவின் மனோகர் லால் கட்டார் அரசுக்கு ஆதரவு அளித்து வந்த இரு சுயேச்சை எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்து ஆதரவைத் திரும்பப் பெற்றனர்.
90 உறுப்பினர்கள் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 40 இடங்களும், ஜனநாயக ஜனதா கட்சிக்கு 10 இடங்களும் உள்ளன. இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சியில் இருக்கின்றன. மேலும் சுயேச்சை எம்எல்ஏக்கள் சிலரும் பாஜக அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். ஆக, பெரும்பான்மைக்குத் தேவையான 46 இடங்களை விட பாஜக கூட்டணிக்கு அதிகமான ஆதரவு இருப்பதால், ஆட்சிக்குச் சிக்கல் இல்லை.
எனினும் கடந்த மாதம் ஆளுநரைச் சந்தித்த முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சித் தலைவருமான பூபேந்தர் சிங் ஹூடா, ஆளும் பாஜக அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகக் கூறினார். நம்பிக்கை வாக்கெடுப்பு தேவை என்றும் அவர் கோரினார்.
இந்நிலையில் இன்று ஹரியாணா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக - ஜனநாயக ஜனதா கூட்டணிக்கு 55 ஓட்டுகள் கிடைத்தன. எதிர்க்கட்சி 32 ஓட்டுகளைப் பெற்றது.
இதன் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் மனோகர் லால் கட்டார் தலைமையிலான ஆளும் பாஜக அரசு வெற்றி பெற்றுள்ளது.