இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு முதன்முதலாக இறந்த நோயாளி கர்நாடக மாநிலம் கலபுரகியைச் சேர்ந்தவர். இந்தத் துயரச் சம்பவம் ஏற்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட உலகின் முதல் நோயாளி 2019-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி சீனாவின் வூஹான் மருத்துவமனை ஒன்றில் கண்டறியப்பட்டார். ஆனால், இறப்புக்குக் காரணம் கரோனா வைரஸ் என அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை. மனிதர்கள் மூலம் மனிதர்களுக்குக் கரோனா பரவும் என்பது 2020-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதிதான் கண்டறியப்பட்டது.
அதற்குள் உலகம் முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவியது. இந்தியாவில், ஜனவரி 19-ம் தேதி வூஹான் பல்கலைக்கழகத்தில் இருந்து கேரளா திரும்பிய மாணவர் ஒருவருக்கு நாட்டின் முதல் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையே கர்நாடக மாநிலம் கலபுரகியைச் சேர்ந்த 76 வயது மனிதர், மார்ச் 10-ம் தேதி உயிரிழந்தார். கரோனா காரணமாக அவர் உயிரிழந்தது மார்ச் 12-ல் உறுதி செய்யப்பட்டது. சவுதி அரேபியாவில் இருந்து அவருக்குத் தொற்று ஏற்பட்டிருந்தது. இது நாடு முழுவதும் பயத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்தத் துயரச் சம்பவம் ஏற்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.
இந்நிலையில் இதுவரை இந்த மாவட்டத்தில் 22,208 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 21,665 பேர் குணமடைந்துள்ளனர். 213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 330 பேர் பலியாகி உள்ளனர்.
கலபுரகியில் தற்போது கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதாகவும், 15 நாட்களுக்கு முன்னால் ஒருவர் கரோனாவால் உயிரிழந்ததாகவும், அதன்பிறகு கரோனாவால் இறப்பு ஏற்படவில்லை என்றும் மாவட்ட சுகாதார அலுவவர் ராஜஷேகர் மாலி, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
கோவிட்-19 தொற்றால் உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகள் பொருளாதார ரீதியாகப் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. கரோனாவுக்குப் பின் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தில் இருந்து உலக நாடுகள் பெரும் போராட்டத்துக்குப் பின் மீள வேண்டிய சூழல் இருப்பதாக ஐஎம்எப் கவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.