இந்தியா

கேரள சிபிஎம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு; 33 சிட்டிங் எம்எல்ஏக்கள், 5 அமைச்சர்களுக்கு சீட் இல்லை

செய்திப்பிரிவு

கேரளாவில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் 83 வேட்பாளர்களின் பட்டியலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. தற்போதுள்ள 5 அமைச்சர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 42 பட்டதாரிகள், 28 வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் இடது ஜனநாயக முன்னணியில் பிரதான கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 140 தொகுதிகளில் 85 இடங்களில் போட்டியிடுகிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 21 இடங்களில் போட்டியிடுகிறது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் 83 வேட்பாளர்களின் பட்டியலை மாநில செயலாளர் விஜயராகவன் திருவனந்தபுரத்தில் இன்று வெளியிட்டார்.

அவர் கூறியதாவது:

''கேரளாவில் சிபிஎம் கட்சி 85 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் தற்போது சிபிஎம் வசம் இருக்கும் குட்டியாடி, ரண்ணி ஆகிய தொகுதிகள் கேரள காங்கிரஸ் மாணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சிஐடியு தலைவர் பி.நந்தகுமார் பொன்னானி தொகுதியில் போட்டியிடுகிறார். தேவிகுளம், மஞ்சேஸ்வரம் ஆகிய தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவி்ல்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இரண்டு முறைக்கு மேல் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படாது. அந்த வகையிலும் வேறு சில காரணங்களாலும் தற்போது எம்எல்ஏக்களாக இருக்கும் 33 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதில் 5 அமைச்சர்களும் அடக்கம். 83 வேட்பாளர்களில் 42 பேர் பட்டதாரிகள், 28 பேர் வழக்கறிஞர்கள். மொத்த வேட்பாளர்களில் 12 பேர் பெண்கள். இதில் 4 பெண்கள் 30 வயதுக்கும் குறைந்தவர்கள்.

மொத்தம் உள்ள 83 வேட்பாளர்களில் 4 வேட்பாளர்கள் 30 வயதுக்கும் குறைந்தவர்கள். 8 வேட்பாளர்கள் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள். 41 வயது முதல் 50 வயது வரை 13 வேட்பாளர்கள், 51 முதல் 60 வயது வரை 44 வேட்பாளர்கள், 60 வயதுக்கு மேல் 24 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது சிபிஎம் வசம் இருக்கும் 7 இடங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 5 இடங்கள் கேரள காங்கிரஸ் மாணிக்கும், 2 இடங்கள் லோக் தந்திரிக் ஜனதா தளத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக், பொதுப்பணித்துறை அமைச்சர் சுதாகரன், தொழிற்துறை அமைச்சர் ஜெயராஜன், கல்வித்துறை அமைச்சர் ரவீந்திரநாத், கலாச்சாரத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கேரள முதல்வர் பினராயி விஜயன் தர்மதம் தொகுதியில் போட்டியிடுகிறார். சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா மட்டனூர் தொகுதியிலும், டி.பி.ராமகிருஷ்ணன் பெரம்பராவிலும், எம்.வி.மாணி உடும்பன்சோலை தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்''.

இவ்வாறு விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT