2005-ம் ஆண்டு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தன்னை பிரிட்டிஷ் குடிமகன் என்று அறிவித்துக் கொண்டதாக சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
மேலும், பேக்காப்ஸ் என்ற பிரிட்டன் தனியார் நிறுவனத்தில் பொறுப்பும் வகித்திருக்கிறார் என்று சுவாமி குற்றம்சாட்டினார். ஆனால் காங்கிரஸ் தரப்பிலிருந்து இதற்கு கடுமையான மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் பொறுப்பு வகித்த தனியார் நிறுவனத்தின் ஆண்டு லாப கணக்குகளின் ஆவணங்களை காட்டிய சுவாமி, அதில் ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடிமகன் என்று குறிப்பிடப்பட்டிருந்ததையும் சுட்டிக் காட்டினார்.
ஆனால், பிரிட்டிஷ் அரசின் தரவுப்பெட்டகத்திலிருந்து தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் அணுகிய ஆவணங்களில் அந்த நிறுவனம் 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்ட போது ராகுல் காந்தி தனது அடையாளத்தை இந்தியர் என்று குறிப்பிட்டதாக தெரியப்படுத்துகிறது. ஆனால், 2005-ம் ஆண்டு வெளியான வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்ட போது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடிமகன் என்று காட்டியிருப்பதும் தெரியவந்துள்ளது.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி எழுதிய கடிதத்தில், “ராகுல் காந்தி தனது பிறந்த தினத்தை சரியாகக் கொடுத்துள்ளார். ஆனால் பிரிட்டன் முகவரியுடன் தன்னை பிரிட்டிஷ் குடிமகன் என்று அறிவித்துள்ளதை நீங்கள் இந்த ஆவணங்களில் பார்க்கலாம். அந்த தனியார் நிறுவனத்தில் ராகுல் காந்திக்கு 65% பங்குகள் உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.
சுவாமி மேலும் கூறும்போது, இந்திய அரசியல் சாசனம் பிரிவு 9-ன் படி எந்த ஒரு இந்தியக் குடிமகனும் தானாகவே விரும்பி அயல்நாட்டு குடியுரிமை கோர முடியாது. பிரிட்டனில் இரட்டைக் குடியுரிமை அனுமதிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அனுமதிக்கப்படுவதில்லை.
மேலும் ஜூரிச் வங்கி ஒன்றில் அறிவிக்கப்படாத ராகுல் காந்தி கணக்கு வைத்திருப்பதாகவும் சுவாமி குற்றம்சாட்டினார்.
இந்த பகீர் குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுஜ்ரேவாலா, கருத்து தெரிவிக்கும் போது, "பிஹார் தேர்தல் தோல்வியினால் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலை மூடிமறைக்கவும், மலிவான விளம்பரம் தேடிக் கொள்ளவும் இந்தக் குற்றச்சாட்டு எழுப்பப் படுகிறது.
பிறந்தது முதல் ராகுல் காந்தி இந்தியக் குடியுரிமையையே பெற்றுள்ளார். இந்திய பாஸ்போர்ட்தான் அவரிடம் உள்ளது. வேறு நாட்டு குடியுரிமையை அவர் ஒருபோதும் பெறவில்லை" என்றார்.