இந்தியா

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முழக்கத்துக்கு தடை இல்லை: மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

செய்திப்பிரிவு

மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என பாஜக தலைவர்கள் முழக்கம் எழுப்ப தடை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இது தொடர்பாக வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தலைவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கம் எழுப்புகின்றனர். மத அடிப்படையிலான இந்த முழக்கத்தால் சமூக ஒற்றுமை சீர்குலையும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் இது குற்றமாகும்” என கூறியிருந்தார்.

மேலும் 5 மாநிலங்களுக்கான தேர்தலில் மே.வங்கத்தில் மட்டும் 8 கட்டங்களாக தேர்தல் நடத்துவது சமத்துவ உரிமைக்கு எதிரானது என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் தொடக்கத்தில், இது தேர்தல் வழக்கு என்பதால் மனுதாரர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை நாடலாம் என நீதிபதிகள் கூறினர்.

இதை ஏற்க மறுத்த எம்.எல்.சர்மா, “இது தேர்தல் மனுவுக்கான விஷயம் அல்ல. ஒரு கட்சி மதவாத முழக்கத்தை பயன்படுத்துகிறது” என்றார். தொடர்ந்து, 1978-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பை முன்னுதாரணமாக கூறினார்.

அப்போது நீதிபதிகள், "தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய பிறகு பிரச்சார முறைகேடுகள் தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்கலாம் என அதில் எந்த பத்தியில் உள்ளது" என கேள்வி எழுப்பினர்.

இதற்கு விசாரணையை ஒருநாள் தள்ளி வைக்குமாறு எம்.எல்.சர்மா கோரினார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT