ஸ்ரீநிவாச மங்காபுரம் கல்யாணவெங்கடேஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தில் தேருக்கு பதிலாக சர்வபூபால வாகனத்தில் ஸ்ரீ நிவாசர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி அடுத்துள்ள ஸ்ரீ நிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தில் கரோனா காரணமாக சுவாமியின் வாகன சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆயினும் காலையும், இரவும் இரு வேளைகளிலும் உற்சவ மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.
இதில் 8ம் நாளான நேற்றுகாலை வழக்கமாக தேரோட்டம்நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், கரோனா நிபந்தனைகளின்படி, தேருக்கு பதில், நேற்று காலை உற்சவர்களான ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வெங்கடேஸ்வரர் சர்வ பூபால வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இரவு குதிரை வாகனத்தில்உற்சவர் ஸ்ரீ நிவாசர் எழுந்தருளினார். பிரம்மோற்சவத்தின் இறுதி நாளான இன்று காலை கோயில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் சக்கர ஸ்நான தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
மாலை பிரம்மோற்சவ கொடியிறக்க நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.