நகரியில் நேற்று நடைபெற்ற நகராட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென கபடி ஆடிய எம்.எல்.ஏ ரோஜா. 
இந்தியா

நகராட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது கபடி விளையாடிய எம்எல்ஏ ரோஜா

செய்திப்பிரிவு

நகரி தொகுதி எம்.எல்.ஏவும், நடிகையுமான ரோஜா, நகராட்சி தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆண்களுக்கு இணையாக கபடி விளையாட்டில் பங்கேற்று அனைவரையும் வியக்க வைத்தார்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நகரி தொகுதியின் ஆளும் கட்சி எம்.எல்.ஏவும், நடிகையுமான ரோஜா தனது தொகுதியில் சில நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இவருக்கு உறுதுணையாக இவரது கணவரும், இயக்குநருமான ஆர்.கே. செல்வமணியும் உடன் இருக்கிறார். ஆந்திர மாநிலத்தில் நேற்று மாலை நகராட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது.

நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், நகரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ரோஜா, அங்கு ஆண்கள் கபடி போட்டி நடப்பதை அறிந்து அந்த இடத்துக்கு சென்றார்.

அப்போது எம்எல்ஏ ரோஜாவை கபடி போட்டிகளை தொடங்கி வைக்குமாறு போட்டி நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதனால், ரோஜாவும், போட்டியை தானே ஆடி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கபடி ஆடியதை கண்ட பொதுமக்கள் மிகவும் வியந்தனர். பலத்த கரகோஷங்களை எழுப்பி ரோஜாவை உற்சாகப்படுத்தினர். பின்னர் ரோஜா பேசும்போது "எனக்கு சிறு வயது முதலே கபடி ஆடுவது பிடிக்கும். பள்ளி, கல்லூரி விளையாட்டு போட்டிகளில் நான் கபடி விளையாடி உள்ளேன்" என்றார்.

SCROLL FOR NEXT