சமூகத்தில் ஏழ்மை மற்றும் விளிம்பு நிலையில் இருப்போருக்குக் கல்வி, வேலை வாய்ப்புகளில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்படுவது அவசியமா என்பது குறித்து மாநிலங்கள் பதில் அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரும்பாலான மாநிலங்களில் கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு 50 சதவீதத்துக்குள் இருக்கும் நிலையில், அதை தொடர வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது குறித்து மாநிலங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தியர்களுக்குக் கல்வி வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, 50 சதவீதமாக இருந்த இட ஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்தி 2018-ம் ஆண்டு மகாராஷ்டிர சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேறியது.
ஆனால், இந்தச் சட்டத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2019-ம் ஆண்டு செப்டம்பரில் இந்தச் சட்டத்துக்குத் தடை விதித்தது. ஆனால், இந்தச் சட்டத்தால் பயன் அடைந்தவர்களையும் எந்தத் தொந்தரவும் செய்யக் கூடாது எனத் தெரிவித்தது.
1992-ம் ஆண்டு இந்திரா சாஹ்னே வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இட ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கும் அதிகமாகச் செல்லக்கூடாது. தவிர்க்க முடியாத அசாதாரண சூழலில் இட ஒதுக்கீடு அதிகரிக்கலாம் எனத் தீர்ப்பளித்தது.
ஆனால், அதை மீறி தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு கல்வி, வேலைவாய்ப்புகளில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கூடுதல் இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்திருத்தம், அரசியலமைப்பின் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளதால், நீதிமன்றம் ஆய்வு செய்ய முடியாது.
அதேபோன்று மகாராஷ்டிர அரசும் மராத்தியர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளித்து, 50 சதவீதமாக இருந்ததை 65 சதவீதமாக உயர்த்தியது.
இந்நிலையில் மராத்தியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.
உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையில், நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், எஸ்.அப்துல் நசீர், ஹேமந்த் குப்தா, எஸ்.ரவிந்திர பாட் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வு முன் மராத்தியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
மகாராஷ்டிர அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, கபில் சிபல், பி.எஸ்.பாட்வாலியா ஆகியோர் ஆஜராகினர். மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜரானார்.
மராத்தியர்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு இன்று அரசியல் சாசன அமர்வு விசாரணையைத் தொடங்க இருந்தது.
ஆனால், நீதிபதி அசோக் பூஷண் கூறுகையில், "இட ஒதுக்கீடு தொடர்பாக 1992-ம் ஆண்டு இந்திரா சாஹ்னே வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டுமா? என்பது குறித்து அனைத்து மாநிலங்களும் தங்களின் கருத்துகளைச் சுருக்கமாக எழுத்துபூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். அதன்பின் இந்த வழக்கின் விசாரணை வரும் 15-ம் தேதி முதல் தொடங்கும்" எனத் தெரிவித்தார்.