நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் 27-ம் தேதி முதல் கட்டத் தேர்தல் மேற்கு வங்கம், அசாம் மாநிலத்தில் நடக்கிறது. அதற்குள்ளாகவே கூட்டத் தொடர் முடிக்கப்படலாம் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை இரு அமர்வுகளாக நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் அமர்வு ஜனவரி 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ம் தேதி வரையிலும், 2-வது அமர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி வரையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, குடியரசுத் தலைவர் உரையுடன் ஜனவரி 29-ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. பிப்ரவரி 1-ம் தேதி 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் இரு அவைகளிலும் நடந்தது. பட்ஜெட் மீதான விவாதங்களும் இரு அவைகளிலும் நடந்தன. முதல் அமர்வில் மக்களவை 99.5 சதவீதம் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டது என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடப்பதால், நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரி திரிணமூல் காங்கிரஸ், உள்ளிட்ட சில கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், சிவசேனா உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 5 மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு எம்.பி.க்கள் விவாதங்களில் பங்கேற்க முடியாத சூழல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால், முதல் கட்டத் தேர்தல் நடக்கும் 27-ம் தேதிக்கு முன்பாகவே நாடாளுமன்றக் கூட்டத்தை முடித்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக நாடாளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றக் கூட்டத்தை முன்கூட்டியே முடித்துக்கொள்வது குறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அனைத்துக் கட்சிகளையும் கூட்டி ஆலோசனை செய்து முடிவு எடுப்பார் எனத் தெரிகிறது.
மேலும், நாடாளுமன்றத்தை வழக்கம்போல் காலையில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எம்.பி.க்கள் மத்தியில் எழுந்தது. இதையடுத்து, இதனால் நாளை முதல் மாநிலங்களவை காலை 11 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணிவரை நடக்கும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
மக்களவையும் இதேபோன்று காலை 11 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிவரை நடக்கும் என்று அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
கரோனா வைரஸ் காலகட்டத்தில் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், மாநிலங்களவை காலை நேரத்திலும், மக்களவை மாலை 4 மணிக்கும் தொடங்கியது. ஆனால், நாளை முதல் நேரம் மாற்றி அமைக்கப்படுகிறது.