மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி : கோப்புப்படம் 
இந்தியா

தேர்தலில் சீட் மறுப்பு: மம்தா பானர்ஜியின் நெருங்கிய தோழி பாஜகவில் இணைகிறார்

பிடிஐ

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய தோழியும், 4 முறை எம்எல்ஏவாக இருந்தவருமான சோனாலி குஹா பாஜகவில் இணையப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 291 வேட்பாளர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி வெளியிட்டார். இந்தப் பட்டியலில் 20 அமைச்சர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

குறிப்பாக நிதியமைச்சர் அமித் மித்ரா, நிலவளத்துறை அமைச்சர் அப்துல் ராஜாக் முல்லா, வேளாண் அமைச்சர் புமேந்து பாசு ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 50 பெண் வேட்பாளர்களுக்கும், 42 முஸ்லிம்களுக்கும் மம்தா இந்த முறை வாய்ப்பு வழங்கியுள்ளார்.

இதில் முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய தோழியாகவும், நெருக்கமானவராகவும் இருப்பவர் சோனாலி குஹா. சத்காச்சியா தொகுதியிலிருந்து 4-வது முறையாக எம்எல்ஏவாக சோனாலி குஹா இருக்கிறார்.

இந்த முறை சோனாலிக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்துள்ள சோனாலி குஹா பாஜகவில் இணையத் திட்டமிட்டுள்ளார்.

சோனாலி குஹா, மம்தா பானர்ஜி

இதுகுறித்து சோனாலி குஹா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், " தீதி (மம்தா) என்னைக் கைவிட்டுவிட்டபின், நான் அவரைவிட்டுச் செல்வதில் என்ன தவறு இருக்கிறது? நான் பாஜகவில் இணைய விருப்பமாக இருப்பது குறித்து பாஜக துணைத் தலைவர் முகுல் ராயுடன் பேசினேன்.

எனக்கு எம்எல்ஏ சீட் வேண்டாம், கட்சியில் நல்ல பதவி வேண்டும் என்று கேட்டேன். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். மேலிடத்திலும் பேசிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். ஆதலால், பாஜகவில் இணைய இருக்கிறேன்.

நான் என்னுடைய கடினமான உழைப்பு, முயற்சிகள் அனைத்தையும் தீதிக்குக் கொடுத்தேன். அவர் மீது எவ்வளவு மரியாதையாகவும், கட்சிக்கு உண்மையாகவும் இருந்தேன் என்பது மற்றவர்களுக்குத் தெரியும். இனிமேல் என்னுடைய உழைப்பைப் புதிய கட்சிக்கு வழங்குகிறேன்.

எனக்கு சீட் வழங்கப்படவில்லை என்பதை எனக்கு முன்கூட்டியே கூறாமல் இருந்தது எனக்கு வேதனையாக இருந்தது" எனத் தெரிவித்தார்.

சோனாலி குஹா இன்றோ அல்லது நாளையோ பாஜகவில் முறைப்படி இணைவார் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT