கேரள தங்கக் கடத்தல் மற்றும் டாலர் கடத்தல் வழக்கில் மத்திய அரசு அமலாக்கப் பிரிவு, சுக்கத் துறை வாயிலாக மார்க்சிஸ்ட் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிவரும் முதல்வர் பினராயி விஜயனுக்கு 7 கேள்விகளை முன்வைத்துள்ளார் அமித் ஷா.
உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று திருவனந்தபுரம் சென்றார். சங்குமுகம் கடற்கரையில் நடந்த பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமித் ஷா, முதல்வர் பினராயி விஜயனை கடுமையாக சாடினார்.
தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக அவர் 7 கேள்விகளை முன்வைத்தார்.
1. டாலர், தங்கக் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபர்கள் தங்களின் அலுவலகத்தில் தங்களுக்கு கீழ் வேலை பார்த்தார்களா இல்லையா?
2. தங்களின் அரசாங்கம் அவர்களுக்கு மாதம் ரூ.3 லட்சம் வரை ஊதியம் வழங்கியதா இல்லையா?
3. தங்களின் முதன்மைச் செயலாளர், அரசு திட்டத்தின் கீழ் பணியாற்றிய பெண்ணுக்கு ஓர் உயரிய பொறுப்பை வழங்கினாரா இல்லையா?
4. அந்தப் பெண், அரசு சார்பில் வெளிநாட்டுப் பயணங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டாரா இல்லையா?
5. குற்றஞ்சாட்டப்பட்ட பெண் தங்களின் அதிகாரபூர்வ இல்லத்துக்கு வந்திருக்கிறாரா இல்லையா?
6. விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட தங்கம் சிக்கியபோது, தங்களின் அலுவலகத்தில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததா இல்லையா?
7. சில அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா இல்லையா?
இந்த முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளியுங்கள். இதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் முதல்வரே. இன்று நான் பொதுவெளியில் இந்தக் கேள்விகளை முன்வைத்துள்ளேன். நீங்களுக்கு இதற்கு வெளிப்படையாக பொது இடத்தில் பதிலளிப்பீர்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அமித் ஷா சவால் விடுத்திருந்தார்.
முன்னதாக, கேரளாவில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்காக அமலாக்கப் பிரிவு, சுங்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகள் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டன என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கடுமையாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும்தான் கடுமையான போட்டி இருந்து வருகிறது. பாஜக போட்டியிட்டாலும் பெரிதாக எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.