கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலியின் அந்தரங்க வீடியோ வெளியான நிலையில், 6 கர்நாடக அமைச்சர்கள் தங்களைப் பற்றிய வீடியோ, ஆடியோ, புகைப்படம் உள்ளிட்டவற்றை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி பெண் ஒருவருக்கு அரசு வேலைவாங்கி தருவதாக கூறி பாலியல்ரீதியான தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் படுக்கையறையில் இருப்பது போன்ற அந்தரங்கவீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளின் போர்க்கொடியை தொடர்ந்து ரமேஷ் ஜார்கிஹோலிதனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.
இந்நிலையில் சமூக செயற்பாட்டாளர் ராஜசேகர் முலாலிதன்னிடம் 19 முக்கிய பிரமுகர்களின் அந்தரங்க வீடியோ காட்சிகள் இருக்கின்றன. அதனை விரைவில் வெளியிடுவேன் என அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கர்நாடக மருத்துவ உயர்க்கல்வித்துறை அமைச்சர் சுதாகர், வேளாண்துறை அமைச்சர் பி.சி.பாட்டீல், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ஷிவராம்ஹெப்பார், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நாராயண் கவுடா, கூட்டுறவுத்துறை அமைச்சர் சோமசேகர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பைரத்தி பசவராஜ் ஆகியோர் பெங்களூரு உரிமையியல் நீதிமன்றத்தில் மனுஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
அதில், ‘‘எங்களை அரசியல்ரீதியான பழிவாங்கும் எண்ணத்தோடும், எங்களது நற்பெயரை கெடுக்கும் நோக்கத்தோடும் அண்மைக் காலமாக சில ஊடகங்கள் அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டுள்ளன. எங்களைப் பற்றிய வீடியோ சி.டி.யை வெளியிடுவதாக சிலர்மிரட்டுகின்றனர். எனவே எங்களைப் பற்றிய வீடியோ, ஆடியோ, புகைப்படங்கள், செய்தி ஆகியவற்றை 67 ஊடகநிறுவனங்களும் சமூக செயற்பாட்டாளர் ராஜசேகர் முலாலியும்வெளியிட தடை விதிக்க வேண்டும்’’என கோரியுள்ளனர்.
இதுகுறித்து அமைச்சர் பி.சி.பாட்டீல் கூறுகையில், ‘‘அரசியலில் எனக்கு வழிகாட்ட குருயாரும் இல்லை. என்னை அரசியலில் இருந்து அகற்றுவதற்காக சிலர் எல்லா விதமான சதிவேலைகளையும் செய்துவருகின்றனர். எங்களை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவும் முயற்சிக்கின்றனர்’’என்றார்.
பேரம் நடக்கிறது
கர்நாடக முன்னாள் முதல்வர்குமாரசாமி கூறுகையில், ‘‘ரமேஷ்ஜார்கிஹோலியின் அந்தரங்க வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ.5 கோடி பேரம் பேசப்பட்டதாக உறுதியான தகவல்கள்கிடைத்தன. அந்த விவகாரத்தில் பணம் கை மாறுவதில் சிக்கல் ஏற்பட்டதாலேயே வீடியோ வெளியாகி இருக்கிறது. ஏமாற்றுக்காரர்கள், சமூக செயற்பாட்டாளர், பத்திரிகையாளர், வழக்கறிஞர் என்ற பெயரில் இதை தொழிலாக செய்கின்றனர். இத்தகைய மோசடி செயலில் ஈடுபடுவோரை கண்டுபிடித்து முதலில் தண்டிக்க வேண்டும்’’ என்றார்.