சரத் பவார்: கோப்புப் படம். 
இந்தியா

பிரதமர் மோடிக்கு கொல்கத்தா பேரணியில் பங்கேற்க நேரம் உள்ளது; விவசாயிகளைச் சந்திக்க முடியவில்லை: சரத் பவார் தாக்கு

ஏஎன்ஐ

கொல்கத்தாவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு நேரம் உள்ளது. ஆனால், வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 100 நாட்களுக்கும் மேலாகப் போராடி வரும் விவசாயிகளைச் சந்திக்க முடியவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் விமர்சித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் புறநகர் பகுதிகளில் விவசாயிகள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை 11 சுற்றுப் பேச்சுவார்த்தை மத்திய அரசுக்கும், வேளாண் சங்கத்தினருக்கும் இடையே நடந்துள்ளது. இதுவரை எந்தவிதமான உறுதியான முடிவும் ஏற்படவில்லை. அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை குறித்து இருதரப்பிலும் எந்த அழைப்பும் இதுவரை இல்லை.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் ராஞ்சியில் உள்ள ஹார்மு நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் இன்று பங்கேற்றார்.

அப்போது அவர் கூறியதாவது:

''மத்திய அரசின் பொறுப்பு என்பது சகோதரத்துவத்தை உருவாக்குவதுதான். ஆனால் பாஜக, நாட்டில் வகுப்புவாதத்தைப் பரப்புகிறது. பாரதிய ஜனதா கட்சி, வகுப்புவாத விஷத்தைப் பரப்புகிறது.

டெல்லியின் புறநகரில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகிறார்கள். கொல்கத்தாவில் நடக்கும் தேர்தல் பொதுக்கூட்டத்துக்குச் செல்ல பிரதமர் மோடிக்கு நேரம் இருக்கிறது. ஆனால், விவசாயிகளைச் சந்திக்க முடியவில்லை.

மத்திய அரசு விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கப் பிரிவு ஆகியவை மூலம், பாஜக எந்தெந்த மாநிலங்களில் ஆட்சியில் இல்லாமல், எதிர்க்கட்சிகள் ஆள்கிறதோ அந்த மாநிலங்களில் அவர்களை நசுக்கும் வேலையில் ஈடுபடுகிறது. மத்திய அரசின் அனைத்து அமைச்சர்களும் தேர்தல் நடக்கும் மாநிலங்களில், பிரச்சாரத்தில் பரபரப்பாக இருக்கிறார்கள். இந்தத் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துகிறது மத்திய அரசு''.

இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT