கோப்புப்படம் 
இந்தியா

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு நாளை தொடக்கம் : ஏப்ரல் 8-ம் தேதி வரை நடக்கும்

பிடிஐ

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு நாளை தொடங்குகிறது. இந்த அமர்வு நாளை தொடங்கி (மார்ச் 8) ஏப்ரல் 8-ம் தேதி வரை நடக்கும்.

கரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு வழக்கம் போல் மாநிலங்களவை காலை நேர அமர்விலும், மக்களவை மாலையும் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை இரு அமர்வுகளாக நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் அமர்வு ஜனவரி 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ம் தேதி வரையிலும், 2-வது அமர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி வரையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, குடியரசுத் தலைவர் உரையுடன் ஜனவரி 29-ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. பிப்ரவரி 1-ம் தேதி 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் இரு அவைகளிலும் நடந்தது. பட்ஜெட் மீதான விவாதங்களும் இரு அவைகளிலும் நடந்தன. முதல் அமர்வில் மக்களவை 99.5 சதவீதம் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டது என்றும், 50 மணி நேரம் கூட்டத்தொடரை நடத்தத் திட்டமிடப்பட்டதில் 49 மணி நேரம் 17நிமிடங்கள் கூட்டத்தொடர் நடந்தது என்றும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் 16 மணி நேரம் 39 நிமிடங்கள் நடந்தது. இதில் 130 உறுப்பினர்கள் பங்கேற்றுப் பேசினர். பட்ஜெட் குறித்த விவாதத்துக்கு 10 மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன் மீதான விவாதம் 14 மணி நேரம் 40 நிமிடங்கள் நடந்தன என்று தெரிவிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் 49 பெண் எம்.பி.க்கள் பங்கேற்றுப் பேசினர் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 2-ம் கட்ட அமர்வு நாளை தொடங்குகிறது. கூட்டத் தொடருக்கு வரும் எம்.பி.க்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் வகையில் தடுப்பூசி மையம் நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 60 வயதுக்கு மேற்பட்ட எம்.பி.க்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த 2-ம் கட்ட அமர்வில் 2021-22ஆம் நிதியாண்டுக்கான மானியக் கோரிக்கைகள், நிதி மசோதாக்கள் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.

இதுதவிர ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டுத் திருத்த மசோதா, தேசிய வங்கிகளுக்கான நிதி கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திருத்த மசோதா, மின்சாரத் திருத்த மசோதா, கிரிப்டோ கரன்ஸி மற்றும் ஒழுங்குமுறை மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட உள்ளன.

மேற்கு வங்கம், அசாம், கேரளா, தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால், இந்த மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை, மாநிங்களவை எம்.பி.க்கள் பெரும்பாலும் கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சிப் பணிக்கும் தேர்தல் பிரச்சாரப் பணிக்கும் எம்.பி.க்கள் செல்வதால், மற்ற மாநில எம்.பி.க்கள் மட்டும் பங்கேற்கக் கூடும். மேலும், பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், அதிமுக, திமுக கட்சிகளின் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட இருப்பதால், அவர்களும் கூட்டத்தில் பங்கேற்பதில் சிக்கல் இருக்கிறது.

SCROLL FOR NEXT