இந்தி திரையுலகின் பிரபல நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பாஜக மாநிலத் தலைவர் திலிப் கோஷ் முன்னிலையில் பாஜவில் இன்று இணைந்தார்.
கொல்கத்தாவில் பிரிகேட் பாரேஜ் மைதானத்தில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் தொடங்கும் முன் மிதுன் சக்ரவர்த்தி பாஜகவில் இணைந்தார்.
பாஜக பொதுச்செயாளர் கைலாஷ் விஜய் வர்க்கியா, துணைத் தலைவர் முகுல் ராய், சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் இந்த நிகழ்வின்போது உடன் இருந்தனர்.
பிரதமர் மோடி பங்கேற்கும் இன்றைய பிரச்சாரக் கூட்டத்தில் மிதுன் சக்ரவர்த்தி பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்த மிதுன் சக்ரவர்த்தி பாஜகவில் முறைப்படி தன்னை இணைத்துக் கொண்டார்.
முன்னதாக, இன்று காலை பெல்காச்சியா பகுதியில் உள்ள மிதுன் சக்ரவர்த்தி இல்லத்துக்கு பாஜக பொதுச் செயலாளர் விஜய் வர்க்கியா சென்று சந்தித்தார். இதனால் பாஜகவில் மிதுன் சக்ரவர்த்தி இணைவது உறுதி எனத் தகவல் வெளியானது.
இது தொடர்பாக பாஜக பொதுச் செயலாளர் விஜய் வர்க்கியா கூறுகையில், "மிதுன் சக்ரவர்த்தியுடன் தொலைபேசியில் பேசினேன். இன்று வருவதாக உறுதியளித்திருந்தார். அதன்படி அவரைச் சந்தித்தேன். அவருடன் பேசியபின் மற்ற விவரங்களைத் தெரிவிக்கிறேன்" எனக் குறிப்பிட்டார்.
70 வயதாகும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தவர். ஆனால், அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
கடந்த இரு மாதங்களாகவே திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் பாஜகவில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதுவரை 2 எம்.பி.க்கள், 15 எம்எல்ஏக்கள் இணைந்துள்ளனர்.
இந்தச் சூழலில் மேற்கு வங்கத் தேர்தல் பிரச்சாரத்தை மிகப்பெரிய பேரணி, பொதுக்கூட்டத்துடன் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.