மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி கொல்கத்தாவில் இன்று பாஜக பிரம்மாண்ட பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் தலைமையில் நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டத்தில் கொல்கத்தாவின் பிரபலமான நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பாஜகவில் இணைவார் எனத் தெரிகிறது.
மேற்குவங்கத்தில் மார்ச் 27 தொடங்கி ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2ல் நடைபெறுகிறது. பாஜகவுக்கு வலுசேர்க்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கத்தில் 20 தொகுதிகளில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இன்று பிரதமர் மேற்குவங்கத்தில் தனது பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.
திரிணமூல் காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா எம்.பி. யாக இருந்த மிதுன் சக்ரவர்த்தை இன்று பாஜகவில் இணையவிருப்பது மேற்குவங்க அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிதுனின் இணைப்பை உறுதி செய்யும் வகையில்பாஜக தேசிய செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா நேற்று மிதுன் சக்ரவர்த்தியைச் சந்தித்தார்.
முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது:
பிரதமர் பங்கேற்கும் இன்றைய பொதுக்கூட்டத்தில் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 57 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியல் வெளியிடப்படுகிறது.
ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தனது வேட்பாளர் பட்டியலை ஏற்கெனவே வெளியிட்ட நிலையில், இன்று பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேற்குவங்கத்தில் கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 3 இடங்களில் மட்டுமே வென்றது, அனால், 2019 மக்களவைத் தேர்தலில் 42 தொகுதிகளில் 18 தொகுதிகளைக் கைப்பற்றியது.
இந்த செல்வாக்கை முதலீடாகக் கொண்டு மேற்குவங்கத்தில் திரிணமூல் ஆட்சியை அகற்ற பாஜக கடும் பிரயத்தனம் செய்து வருகிறது.
பாஜகவுக்கு வலுசேர்க்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கத்தில் 20 தொகுதிகளில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.