கடந்த மாதம் உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் ஜோஷிமத் பகுதியில் இருந்த பனிப்பாறை வெடித்து உருகி பெருவெள்ளம் ஏற்பட்டது.
இதனால் ரிஷிகங்கா, அலக்நந்தா, தவுலிகங்கா ஆறுகளில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த ஆறுகளின் இடையே கட்டப்பட்டிருந்த நீர்மின்சார நிலையங்கள் அடித்துச் செல்லப்பட்டன. நீர்மின்சார நிலைய கட்டுமான பணியில் இருந்த 200-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில்72 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. காணாமல் போன 132 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டனர். சிலர் மட்டுமே மீட்கப்பட்டனர்.
திடீரென ஏற்பட்ட இந்த பனிப்பாறை வெடிப்புக்குக் காரணம் என்ன என்பது குறித்து காத்மாண்டுவைச் சேர்ந்த இன்டர்நேஷனல் சென்டர் ஃபார் இன்டகரேட்டட் மவுன்டைன் டெவலப்மண்ட் ஃபன்ட் (ஐசிஐஎம்ஓடி) என்ற அமைப்பு ஆராய்ச்சி நடத்தியது.
அந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாவது: ஜோஷிமத் பகுதியில் அமைந்துள்ள ரவுன்ட்டி பனிச்சிகரத்தில் இருந்த பனிப்பாறையானது வெடித்து திடீரென சரிந்துள்ளது. அதிக வெப்பம், கன மழை காரணமாக இந்த பேரழிவு ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
உயரமான பனிச் சிகரத்திலிருந்து பாறை சரிந்து பூமியைத் தொட்டபோது பனிப்பாறைகள் உருகி பெருவெள்ளம் ஏற்பட்டது. சுமார் 1.6 கிலோமீட்டர் தூரத்துக்கு பாறையானது ஒரே நேர்க்கோட்டில் சரிந்துள்ளது. பனிக்கட்டி உருகுவதற்குத் தேவையான வெப்பம் அங்கு இருந்தததால் உடனடியாக உருகி பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஐசிஐஎம்ஓடி அமைப்பில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மியான்மர், வங்கதேசம், பூடான், நேபாளம் ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.