இந்தியா

அப்போது வாங்கினோம்; இப்போது கொடுக்கிறோம்

செய்திப்பிரிவு

கடந்த 1947-ம் ஆண்டில் இந்தியா விடுதலை பெற்றபோது லட்சக்கணக்கானோர் மலேரி யாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அப்போது கனடாவைச் சேர்ந்த செஞ்சிலுவை சங்கம் சார்பில் இந்தியாவுக்கு 93 பெட்டிகளில் பென்சிலின் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன.

கனடாவில் இருந்து விமானத்தில் அனுப்பப்பட்ட பென்சிலின் மருந்துகள் கடந்த 1947-ம் ஆண்டு அக்டோபர் 17-ம்தேதி டெல்லி வந்தடைந்தன. அந்த மருந்துகளை அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் ராஜ்குமாரி அம்ரித் கவுர் பெற்றுக் கொண்டார்.

இப்போது கரோனா வைரஸ் காலகட்டத்தில் ஐரோப்பிய மருந்து ஆலைகள்கூட தேவையான அளவுக்கு தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியாமல் திணறி வருகின்றன. ஒரு காலத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்த கனடா, தற்போது கரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது.

கடந்த பிப்ரவரியில் கனடா பிரதமர் ஜஸ்டின், பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கனடாவுக்கு கரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அவரது வேண்டுகோளை ஏற்று இந்தியாவில் இருந்து கனடாவுக்கு 5 லட்சம் குப்பி கரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த தடுப்பூசிகள் கடந்த 4-ம் தேதி கனடா தலைநகர் ஓட்டாவா சென்றடைந்தன. கனடாவுக்கான இந்திய தூதர் அஜயிடம் இருந்து கனடா பொது சேவை அமைச்சர் அனிதா ஆனந்த் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டார்.

கனடா அமைச்சர் அனிதா கூறும்போது, “கனடாவுக்காக 5 லட்சம் குப்பி கோவிஷீல்டு கரோனா தடுப்பூசிகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. மேலும் 15 லட்சம் குப்பி கரோனா தடுப்பூசிகளை அனுப்பிவைக்க இந்தியா உறுதி அளித்துள்ளது. இதற்காக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் கூறும்போது, “இந்தியாவின் மருந்து உற்பத்தி திறனால்தான் கரோனாவை உலகம் வெற்றி கொள்ள முடியும். பிரதமர் மோடியின் சீரிய தலைமையால் உலகம் பலன் அடைகிறது” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

கனடா மட்டுமன்றி உலகம் முழுவதும் 47 நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் வெளிநாடுகளில் இருந்து மருந்துகளை வாங்கினோம். இப்போது வளர்ந்த நாடுகளுக்கு கூட இந்தியா மருந்துகளை அனுப்பி வருகிறது. இதுதொடர்பான கருத்துகள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

SCROLL FOR NEXT