அசாமில் முதல்வர் சர்பானந்த சோனோவால் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. மாநில சட்டப்பேரவைக்கு மார்ச் 27,ஏப்ரல் 1 மற்றும் 6 என 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற வுள்ளது.
அசாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் 2 கட்ட தேர்தலில் போட்டியிடும் 70 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பாஜக நேற்றுமுன்தினம் அறிவித்தது. அதில், கேபினட் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பெயர் இடம்பெற்றது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஏனெனில், இந்தத் தேர்தலில் தற்போது முதல்வராக உள்ள சர்பானந்த சோனோவால் மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து பாஜக மேலிடம் எந்தஉறுதிமொழியும் இதுவரை அளிக்கவில்லை. அதனால், சர்மாவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாஜக திட்டமிட்டிருக்கலாம் என்று கட்சியினர் கூறுகின்றனர்.
கடந்த 2015-ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகிய சர்மா, பாஜக.வில் சேர்ந்தார். பின்னர் 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின்னர் அமைச்சர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. மேலும், வடகிழக்கு மாநிலங்களில் ஒருங்கிணைப்பு தலைவராகவும் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை பாஜக நியமித்தது. இவர் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட உள்ளார் என்றும் பேச்சு அடிபட்டது. ஆனால், அசாம் தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்று வெளியான அறிவிப்பு அனைத்து யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.