இந்தியா

வீராணம் ஏரியை தூர்வார ஒதுக்கப்பட்ட ரூ.40 கோடி என்னவானது?- தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி

செய்திப்பிரிவு

வீராணம் ஏரியை தூர்வார ஒதுக்கப்பட்டதாக அரசு அறிவித்த ரூ.40 கோடி என்னவானது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக நேற்று பண்ருட்டியை அடுத்த பெரியக்காட்டுப்பாளையம் மற்றும் விசூர் கிராமத்துக்கு வந்தார் தமிழிசை சவுந்திரராஜன். அவரது வாகனத்தை முற்றுகையிட்ட பெரியக்காட்டுப்பாளையம் கிராம மக்கள் தங்களுக்கு இதுவரை அரசின் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என புகார் கூறினர்.

அவர்களை சமாதானம் செய்த தமிழிசை, பின்னர் நிருபர்களிடம் பேசும்போது ‘மழை பாதிப்பு அதிகம் ஏற்படும் இம்மாவட்டத்தில் அவ்வப்போது கண்மாய்களையும், வாய்க்கால்களை தூர்வாரி நீர் வழிகளை மேம்படுத்தியிருக்க வேண்டிய அரசு, அப்பணியிலிருந்து தவறிவிட்டது.

மாவட்டத்தில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ளவும் கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தவும் அரசு ரூ.600 கோடி ஒதுக்கியிருப்பதாக கூறியுள்ளது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள சேதத்தைப் பார்க்கும்போது, அது போன்ற கட்டமைப்பு வசதிகள் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை எனத் தெரிகிறது.

மேலும் வீராணம் ஏரி தூர்வாரப்பட்டிருந்தாலும் பெரும் சேதத்தை தவிர்த்திருக்கலாம் என விவசாயிகள் கூறுகின்றனர். வீராணம் ஏரியை தூர்வார ரூ.40 கோடி ஒதுக்கியதாக அரசு அறிவித்தது. ஆனால் அந்த நிதி என்னவானது. சரியான முறையில் கண்காணிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றதா என தெரியவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும், உடனடி நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். இம்மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மத்திய அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வரவுள்ளனர் என்றார்.

SCROLL FOR NEXT