இந்தியா

45 நாளில் ரூ.2500 கோடி நிதி: அயோத்தி ராமர்கோயில் நன்கொடை வசூல்

செய்திப்பிரிவு

அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கு பிப்ரவரி 4-ம் தேதி வரை 2500 கோடி ரூபாய் நன்கொடை பெறப்பட்டுள்ளதாக தீர்த்த ஷேத்ர டிரஸ்ட் அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது.

அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையில் பங்கேற்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இதைத்தொடர்ந்து ராமர் கோயில் கட்டுவதற்காக பொது மக்களிடம் நன்கொடைகளை அறக்கட்டளை பெற்று வருகிறது. ராமர் கோயில் கட்டுவதற்கு பல்வேறு இந்து அமைப்புகளும் நிதி திரட்டி வருகின்றன. கட்டுமானப் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்தநிலையில் அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கு பிப்ரவரி 4-ம் தேதி வரை 2500 கோடி ரூபாய் நன்கொடை பெறப்பட்டுள்ளதாக விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்துள்ளது.

கடந்த 45 நாட்களில் நடந்த இந்த நிதி வசூல் போதுமான அளவு இருப்பதால் நன்கொடை வசூல் இயக்கம் நிறைவடைந்ததாக விஸ்வ ஹிந்து பரிஷத் கூறியுள்ளது. அதேசமயம் இனிமேல் நன்கொடை அனுப்ப விரும்புவர்கள் தீர்த்த ஷேத்திர அறக்கட்டகளையின் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT