ராமர்கோயில் கட்டுவதற்காக வீடு வீடாக சென்று நிதி திரட்டும் பணியை நிறுத்திக் கொண்டோம் என ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர டிரஸ்ட் பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது.
அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையில் பங்கேற்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இதைத்தொடர்ந்து ராமர் கோயில் கட்டுவதற்காக பொது மக்களிடம் நன்கொடைகளை அறக்கட்டளை பெற்று வருகிறது. ராமர் கோயில் கட்டுவதற்கு பல்வேறு இந்து அமைப்புகளும் நிதி திரட்டி வருகின்றன. கட்டுமானப் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்தநிலையில் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர டிரஸ்ட் பொதுச்செயலாளர் சம்பத் ராய் இதுகுறித்து கூறியதாவது:
ராமர் கோயில் கட்டுவதற்காக பொது மக்களிடம் நன்கொடைகளை அறக்கட்டளை பெற்று வருகிறோம். கோயில் கட்டுவதற்கு கூடுதல் நிலம் தேவைப்படுகிறது. கோயிலிின் முன்பகுதியில் உள்ள நிலத்தை வாங்குவதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருகிறோம்.
எனினும் முடிவெடுக்கவில்லை. கோயில் கட்டுமான பணி 3 ஆண்டுகளில் முடிவடையும். ராமர்கோயில் கட்டுவதற்காக வீடு வீடாக சென்று நிதி திரட்டும் பணியை நிறுத்திக் கொண்டோம். எனினும் இனிமேலும் கோயிலுக்கு நிதி அளிக்க விரும்புகிறவர்கள் ஆன்லைன் மூலமாக டிரஸ்ட் வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.