இந்தியா

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அதிகரிக்கும் கரோனா தொற்று; 82 சதவீத நோயாளிகள்: மத்திய அரசு எச்சரிக்கை

செய்திப்பிரிவு

மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருவதால் சம்பந்தப்பட்டமாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,327 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,92,088 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 14,234பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா பாதிப்பிலிருந்து மொத்தம் 1,08,54,128 பேர் குணமடைந்தனர்.

கரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 108 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,57,656 ஆக அதிகரிதுள்ளது.

கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,80,304 ஆக உள்ளது.

இந்தநிலையில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருகிறது.

இதையடுத்து மத்திய சுகாதார அமைச்சகம் சம்பந்தபட்ட 5 மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில் ‘‘மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக மீண்டும் உயர்ந்து வருகிறது.

நாட்டில் உள்ள மொத்த கரோனா நோயாளிகளில் 82 சதவீதம் பேர் இந்த 5 மாநிலங்களில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 10216 பேருக்கு நேற்று கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் கேரளாவில் 2776 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே கரோனா பரவலை தடுக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பரிசோதனைகளை அதிரிக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT