பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்த தினேஷ் திரிவேதி: படம் | ஏஎன்ஐ. 
இந்தியா

'பொன்னான தருணத்துக்காகவே காத்திருந்தேன்' - திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தியாளர் தினேஷ் திரிவேதி பாஜகவில் இணைந்தார்

பிடிஐ

நான் பாஜகவில் சேர்வதில் எந்தத் தவறும் இல்லையே என்று கடந்த மாதம் பேட்டி அளித்த திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி தலைவர் தினேஷ் திரிவேதி, இன்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. தினேஷ் திரிவேதி கடந்த மாதம் 12-ம் தேதி தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். மாநிலங்களவையில் அவர் பேசுகையில், “என் மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன. அதைத் தடுக்க முடியாதவனாக என்ன செய்ய வேண்டும் என்று குழப்பத்தில் நான் இங்கு அமர்ந்திருக்கிறேன். இங்கு என்னால் எதையும் கூற முடியாது. ஆதலால், நான் என் எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்தார்.

தினேஷ் திரிவேதி ராஜினாமா முடிவை அறிவித்த சில மணி நேரங்களில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய் வர்க்கியா அளித்த பேட்டியில், “தினேஷ் திரிவேதி எப்போது வேண்டுமானாலும் பாஜகவில் சேரலாம். அவரை வரவேற்கிறோம்” எனத் தெரிவித்தார்.


அதன்பின் பேட்டி அளித்த தினேஷ் திரிவேதி, "என்னை ஒவ்வொரு நாளும் பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசச் சொல்கிறார்கள். ஆனால், அது என்னுடைய மனதுக்கும், செயல்பாட்டுக்கும் சரியானது அல்ல.

நான் செய்ய முடியாது எனத் தெரிவித்தேன். பிரதமர் மோடி நல்ல திட்டங்கள், செயல்கள் செய்தால் அதைக் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். அதே நேரத்தில் தவறுகள் ஏதும் செய்தாலும் அதை நாம் சுட்டிக்காட்டி கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். நான் பாஜகவில் சேர்வதில் என்ன தவறு" எனக் கேட்டிருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் தினேஷ் திரிவேதி பாஜகவில் இணைந்தார். உடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் இருந்தார்.

அதன்பின் தினேஷ் திரிவேதி அளித்த பேட்டியில் கூறுகையில், "இந்தப் பொன்னான தருணத்துக்காகவே இந்நாள் வரை காத்திருந்தேன். சில கட்சிகளுக்கு குடும்பம்தான் உச்சபட்சமாக இருக்கிறது. ஆனால், பாஜகவுக்கு மக்கள்தான் முதலாளிகளாக இருக்கிறார்கள். நட்டாவும், என்னுடைய நண்பர்களும் நான் காத்திருப்பதை அறிந்திருந்தார்கள்.

நான் சித்தாந்தங்களை ஒருபோதும் விடமாட்டேன். எனக்குத் தேசம் பிரதானம். இந்த தேசத்தைப் பிரதமர் மோடியும், பாஜகவும்தான் பாதுகாப்பாக வைக்க முடியும் என ஒவ்வொருவருக்கும் தெரியும்.

அண்டை நாடுகளுடனான அனைத்துப் பிரச்சினைகளையும் பிரதமர் மோடியின் தலைமை சிறப்பாகக் கையாண்டது. கரோனா வைரஸ் பரவலையும் சிறப்பாகக் கையாண்டு போரில் வெற்றி பெற்றுள்ளது மோடி தலைமை" எனத் தெரிவித்தார்.

மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படும் தினேஷ் திரிவேதி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ரயில்வே அமைச்சராக இருந்தவர். அதன்பின் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினராக தினேஷ் திரிவேதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT