5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும்போது பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எதிர்மறை பிரச்சாரம் செய்ய வாய்ப்பிருப்பதால் பாஜக நிர்வாகிகள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
மேற்கு வங்கம், அசாம் மாநிலத்தில் வரும் 27-ம் தேதி முதல்கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது இந்த தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படலாம்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடக்கிறது. அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இதற்காக பாஜக மத்திய தேர்தல் குழு கடந்த 2 நாட்களாக கூடி ஆலோசனை நடத்தியது. பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மத்திய தேர்தல் குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பாளர்களை மட்டும் உறுதி செய்து அறிவித்தது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி கூறியதாவது:
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும்போது பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எதிர்மறை பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளது. எனவே பாஜக நிர்வாகிகள் கவனத்துடன் செயல்பட வேண்டும். வார்த்தைகளை கவனத்துடன் பயன்படுத்துங்கள். நாம் கூறியவற்றை திரித்து கூறி பிரச்சாரம் செய்யப்பட வாய்ப்புள்ளது. மக்களிடம் பாஜக பற்றி தவறான எண்ணம் ஏற்படும் வண்ணம் பேசவும், செயல்படவும் வாய்ப்புண்டு. இதுபோன்ற சூழலில் பாஜக நிர்வாகிகள் சரியான முறையில் அணுகி, மக்களிடம் உரிய விளக்கம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியை கைபற்றி விட வேண்டும் என பாஜக பெரும் முனைப்புடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் இருதரப்புக்கும் இடையே கடுமையான வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் பிரதமர் மோடி இந்த அறிவுரையை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.