மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் செயல்படும் சீரம் இன்ஸ்டிடியூட் கோவிஷீல்டு என்ற பெயரிலும் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் கோவேக்ஸின் என்ற பெயரிலும் கரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கின்றன. இந்த 2 தடுப்பூசிகளும் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக சுகாதார பணியாளர்கள் உட்பட முன்கள பணியாளர்களுக்கும் 2-ம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதனிடையே, டெல்லி பார் கவுன்சில் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் உட்பட நீதித் துறை பணியாளர்களை முன்கள பணியாளர்களாக கருதி, அவர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போட உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் விபின் சங்கி மற்றும் ரேகா பல்லி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:
கரோனா தடுப்பு மருந்து உற்பத்தித் திறன் எவ்வளவு என்பது குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும். மேலும் இப்போது யாருக்கெல்லாம், எந்த அடிப்படையில் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது என்பது குறித்த தகவலை மத்திய அரசு பிரமாண பத்திரமாக நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
இதுபோல நீதிமன்ற வளாகத்தில் இப்போதுள்ள மருத்துவ வசதிகளை ஆய்வு செய்து, கரோனா தடுப்பூசி மையத்தை அமைக்க முடியுமா என்பது குறித்து டெல்லி அரசு அறிக்கை தர வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.