இந்தியா

தெலங்கானா: காங். முன்னாள் எம்.பி.யின் மருமகள், 3 பேரன்கள் தீயில் கருகி உயிரிழப்பு

பிடிஐ

தெலங்கானாவில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சிரிசில்லா ராஜய்யாவின் இல்லத்தில் தீயில் சிக்கிய அவரது மருமகள், 3 பேரன்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தெலுங்கானா - வாரங்கல் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருந்தவர் சிரிசில்லா ராஜய்யா. இன்று அதிகாலை இவரது வீட்டில் தீ பரவியது. இதில், ராஜய்யாவின் மருமகள் சரிகா மற்றும் பேரன்கள் ஏழு வயது அபிநவ், மூன்று வயது இரட்டையர்களான அயன், ஸ்ரீயான் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வீட்டில் தீப்பற்றியதற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை என்றும், தற்கொலை உள்ளிட்ட எல்லா கோணங்களிலும் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

சம்பவம் நடந்த வீட்டில் கேஸ் சிலிண்டரின் ரெகுலேட்டர் திறந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

"சரிகா தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பில்லை. அவர் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்" என்று அவரது சகோதரி கூறியுள்ளார்.

சம்பவம் நடந்தபோது சரிகாவின் கணவர் அணில் குமார் உள்ளிட்ட மற்றவர்கள் எங்கு சென்றார்கள் என்பது உள்ளிட்ட எந்த விவரமும் தெரியவில்லை.

தற்போதைக்கு எதுவும் திட்டவட்டமாகக் கூறமுடியாது என்றும், தீவிரமாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் வாரங்கல் போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT