கோவேக்சின் தடுப்பூசி 81% பலனளிப்பதாக அதன் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கியது.
இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோவேக்சின் தடுப்பூசி 81% பயனளிப்பதாகவும், பிரிட்டனில் உருவாகிய உருமாறிய கரோனா வைரஸையும் தடுப்பதில் நல்ல செயலாற்றலைக் காட்டுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக 43 பேரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும். இடைக்கால முயற்சியாக 87 பேரிடம் சோதனை செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இறுதியாக 130 பேரிடம் சோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், முடிவுகளை ஆய்வு செய்யும் பணி நடப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் நாட்டின் பல பகுதிகளிலும் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது.
இதனால், இந்த மாநிலங்களில் கண்காணிப்பை அதிகரிக்கும்படி மத்திய சுகாதார அமைச்சகம் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் கரோனா தொற்றைத் தடுக்க கோவேக்சின், கோவிஷீல்டு, ஃபைஸர், மாடர்னா, ஸ்புட்னிக் 5, ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.