கேரளாவில் மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் மாறி, மாறி ஆட்சி அமைப்பதுதான் கடந்தகால வரலாறு. சபரிமலைக்கு கேரள அரசு அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதித்தது சர்ச்சையைக் கிளப்பியது. அதனை எதிர்த்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தின. அதேநேரத்தில் நாடாளுமன்றத் தேர்தலும்வர, அங்கு மொத்தமுள்ள 20 தொகுதிகளில், ஆழப்புழா தொகுதியைத் தவிர மீதம் இருந்த 19 தொகுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி வாரி சுருட்டியது. வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியே களம் இறங்கி வெற்றி பெற்றார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தங்கக் கடத்தல் வழக்கில் ஆளும் மார்க்சிஸ்ட் அரசுக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ், பாஜக கட்சிகள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தன. இந்தப் போராட்டம் கொடுத்த உற்சாகத்தில் வழக்கம்போல் ஆட்சிமாற்றம் இருக்கும் என மெத்தனமாக தேர்தல் பணி செய்தனர் காங்கிரஸ்காரர்கள். ஆனால் தங்கக் கடத்தல் விவகாரம் உச்சத்தில் இருந்தபோதே அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கூட்டணி பெரிய வெற்றி பெற்றது.
மொத்தமுள்ள 6-ல், 5 மாநகராட்சியையும் சிபிஎம் கூட்டணி கைப்பற்ற காங்கிரஸ் தரப்பு கடும் அதிர்ச்சியடைந்தது. அப்போதே காங்கிரஸின் கோஷ்டிபூசலால்தான் இவ்வளவு பெரியதோல்வி ஏற்பட்டதாக பேசப்பட்டது. இளம் வயதினரையும், மாணவர்களையும் களம் இறக்கி மார்க்சிஸ்ட் வாகைசூட அதன்பின்னரே கோஷ்டி பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் கேரள காங்கிரஸார். இந்நிலையில் ஏசியாநெட் உட்பட மூன்று மலையாள ஊடகங்கள் நடத்திய கருத்து கணிப்பில், மார்க்சிஸ்ட் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பிருப்பதாக கணிக்க, கடைசி அஸ்திரமாக ராகுல் காந்தியை களம் இறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது கேரள காங்கிரஸ்.
உம்மன் சாண்டிக்கு பொறுப்பு
இரு முறை முதல்வராக இருந்த உம்மன் சாண்டி தலைமையில் ஒரு கோஷ்டியும் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா தலைமையில் ஒரு கோஷ்டி இயங்கி வந்ததன. இந்நிலையில் ராகுல் காந்தி வழிகாட்டுதலில் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
ரமேஷ் சென்னிதலா, சசி தரூர் உள்ளிட்டோரை உள்ளடக்கிய அந்தக் குழுவுக்கு உம்மன் சாண்டி தலைவராக்கப்பட்டுள்ளார். மாநில காங்கிரஸில் இதுவரை இல்லாத அளவுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன், ரமேஷ் சென்னிதலா, உம்மன் சாண்டி என காங்கிரஸ் நிர்வாகிகள் கைகோத்து காசர்கோடு முதல் திருவனந்தபுரம வரை ஐஸ்வர்யா கேரள யாத்திரையை நடத்தி முடித்துள்ளனர். தேர்தல் நெருங்கும் நிலையில் சாண்டியும், ரமேஷ் சென்னிதலாவும் சேர்ந்தே பயணிப்பது பலரையும் புருவம் உயர்த்தவைத்துள்ளது. இந்த யாத்திரையின் ஊடே மேஜர் ரவி, ரமேஷ் பிசாரடி, இடைவேளை பாபு என திரைப்பிரபலங்களையும் காங்கிரஸில் இணைத்துள்ளனர்.
ராகுல் நம்பிக்கை
அதேபோல் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வயநாடு தொகுதியில் ராகுல் நின்றதன் தாக்கம் மாநிலம் முழுவதும்் எதிரொலித்தது. அதேபோல் தேர்தல் முடியும் வரை ராகுலை கேரளாவிலேயே தங்கவைக்கும் திட்டத்தையும் காங்கிரஸார் வகுத்துள்ளனர். முதல்வர்பினராயி விஜயனும், “பாஜகவைஎதிர்க்க, வளரவிடாமல் தடுக்ககேரளாவில் மார்க்சிஸ்ட் இருக்கிறது. ராகுல், பாஜக வலுவாக இருக்கும் மாநிலங்களை விட்டுவிட்டு இங்கு வருவது ஏன்?” எனமார்க்சிஸ்ட் கட்சியின் உள்ளரங்க கூட்டங்களில் கூட ராகுல் காந்தியை சாடத் தவறவில்லை. ராகுலை முன்னிறுத்தும் காங்கிரஸின் அரசியல் பயணம் மாற்றத்தைத் தரும் என்பது கேரள காங்கிரஸாரின் நம்பிக்கையாக உள்ளது.