நீதிபதிகளை நியமிப்பதற்கான தேர்வுக் குழு (கொலீஜியம்) நடைமுறையை மேம்படுத்த வரும் 13-ம் தேதி வரை ஆலோசனைகளைக் கூறலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமித்து வந்தது. கொலீஜியம் என்றழைக்கப்படும் இந்த நடைமுறைக்கு மாற்றாக தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்தது.
இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு கடந்த 16-ம் தேதி, தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து கொலீஜியம் நடைமுறையை மேம்படுத்துவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 3-ம் தேதி விசாரணைக்கு வந்தது. கடந்த 16-ம் தேதி தீர்ப்பு வழங்கிய அதே 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கையும் விசாரித்தது.
அப்போது, கொலீஜியம் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம் என்று மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது. இதே கருத்தை பல்வேறு சட்ட நிபுணர்களும் வலியுறுத்தினர். அவர்கள் தங்கள் கருத்துகளை எழுத்துபூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: கொலீஜியம் நடைமுறை குறித்த கருத்து, ஆலோசனைகளை தெரிவிக்க விரும்புவோர் வரும் 13-ம் தேதிக்குள் மத்திய சட்ட அமைச்சகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அந்த ஆலோசனைகளை மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும், சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளை பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் அவை அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்திய பார் கவுன்சில் வரும் 14-ம் தேதி நீதிமன்றத்தில் தனது ஆலோசனைகளை நீதிமன்றத்தில் அளிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசு மற்றும் சட்ட நிபுணர்கள் அளிக்கும் ஆலோசனைகள் குறித்து வரும் 18, 19-ம் தேதிகளில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.