டெல்லியில் பசுவதை மற்றும் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கும் சட்டமியற்ற உத்தர விடக் கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கை டெல்லி உயர் நீதி மன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
சுவாமி சத்தியானந்த சக்ரதாரி என்ற சாது தாக்கல் செய்திருந்த இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜி.ரோகிணி, நீதிபதி ஜெயந்த் நாத் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நவல் கிஷோர் ஜா, “டெல்லியில் வயதான பசுக்கள், காளைகள், எருதுகளை பராமரிக்க ‘கோகுல் கிராம்’ என்ற பராமரிப்பு இல்லங்களை தொடங்க மாநில அரசுக்கு உத்தர விடவேண்டும்” என்று வாதிட்டார்.
இதையடுத்து டெல்லி மாநில அரசு சார்பில் வழக்கறிஞர் சஞ்சய் கோஸ் வாதிடும்போது, “டெல்லி யில் கால்நடைகளை பாதுகாக்க ஏற்கெனவே வேளாண் கால் நடைகள் பாதுகாப்பு சட்டம் அமலில் உள்ளது. வேளாண் கால்நடைகளை கொல்வதும் கொல்வதற்காக கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வயதான வேளாண் கால்நடைகளை பராமரிக்க 5 இடங்களில் மாநில அரசு பராமரிப்பு இல்லங்களை நடத்தி வருகிறது. இவற்றில் 23 ஆயிரம் கால்நடைகளை பராமரிக்க முடியும். ஆனால் தற்போது சுமார் 10 ஆயிரம் கால்நடைகள் மட்டுமே இவற்றில் உள்ளன. மனுதாரரிடம் கால்நடைகள் இருந்தால் அவற்றை பராமரிக்கவும் தயாராக உள்ளோம்” என்றார்.
இதையடுத்து, தவறான புரிதலின் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி அதனை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.