நாட்டில் அவசரநிலையை காங்கிரஸ் கட்சி கொண்டுவந்தபோது, எந்த அரசு அமைப்பையும் கைப்பற்ற அந்தக்கட்சி முயலவில்லை என்று ராகுல் காந்தி கூறியது நகைப்புக்குரியதாக இருக்கிறது என்று பாஜக கிண்டல் செய்துள்ளது.
அமெரிக்காவின் காமெல் பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியரும், முன்னாள் பொருளாதார ஆலோசகருமான கவுசிக் பாசுவுடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேற்று காணொலி மூலம் உரையாடினார். அப்போது பேசிய ராகுல் காந்தி, " இந்திரா காந்தி காலத்தில் கொண்டுவரப்பட்ட எமர்ஜென்ஸி தவறானது. ஆனால், இப்போதுள்ள சூழலில் இருந்து மிகவும் மாறுபட்டது. காங்கிரஸ் ஒருபோதும் அரசு அமைப்புகளைக் கைப்பற்ற முயலவில்லை" எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜக பதில் அளித்துள்ளது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ராகுல் காந்தி ஆர்எஸ்எஸ் அமைப்பையும், பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்பையும் ஒப்பிட்டுப் பேசியுள்ளது குறித்துக் கேட்டனர்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில் " ராகுல் காந்தி இன்னும் ஆர்எஸ்எஸ் அமைப்பப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள நீண்டகாலம் தேவைப்படும். இந்துத்துவா அமைப்பு, சித்தாந்தங்களை வடிவமைக்கும் அமைப்பாக ஆளும் பாஜக அரசுக்கு வழிகாட்டியாக இருக்கிறது தேசப்பற்றைப் சொல்லித்தரும் உலகின் மிகப்பெரிய பள்ளிக்கூடம் ஆர்எஸ்எஸ். மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தி, தேசப்பற்றை வளர்ப்பதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்கு" எனத் தெரிவித்தார்.
அவசரநிலையின்போது, அரசு அமைப்பு எதையும் காங்கிரஸ் கைப்பற்ற முயலவில்லை என ராகுல் காந்தி பேசியுள்ளது நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பிரகாஷ் ஜவடேகர் அளித்த பதிலில் " அவசரநிலை காலத்தில், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள், பல்வேறு அரசு அமைப்புகள் சுதந்திரமாக இயங்க மறுக்கப்பட்டன.ஆனால், ராகுல் காந்தியோ, எந்தவிதமான அரசு அமைப்பையும் கைப்பற்ற முயலவில்லை எனக் கூறுவது சிரிப்பாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
பாஜகவை விமர்சித்ததால்தான் நடிகை டாப்ஸி, அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறதே என நிருபர்கள் கேட்டனர். அதற்கு பிரகாஷ் ஜவடேகர் பதில் அளிக்கையில், " இது மிகவும் மோசமான கற்பனை. விசாரணை அமைப்புகள் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில்தான் ரெய்டு நடத்துகிறார்கள். இந்த விவகாரம் பின்னர் நீதிமன்றத்துக்கும் கொண்டு செல்லப்பட உள்ளது" எனத் தெரிவித்தார்.