காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஐந்து லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என காங்கிரஸின் பொதுச்செயலாளர் பிரியங்கா வத்ரா அறிவித்துள்ளார். இங்கு அவர், மூன்று கட்டமாக நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் வரும் மார்ச் 27, ஏப்ரல் 1 மற்றும் 6 என மூன்று கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு நேற்று முதல் இரண்டு பிரச்சாரம் செய்ய காங்கிரஸின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா சென்றுள்ளார்.
தேயிலை பயிருக்கு பெயர் போன இம்மாநிலத்தின் பெண் தொழிலாளர்களையும் பிரியங்கா தோட்டங்களில் சந்தித்தார். தொடர்ந்து அதன் பிரச்சாரக் கூட்டங்களில் பேசியவர் தம் கட்சி ஆட்சிக்கு வந்தால் அளிப்பதாக பல்வேறு சலூகைகளை அறிவித்துள்ளார்.
இது குறித்து பிரியங்கா தனது மேடைகளில் பேசுகையில், ‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 5 லட்சம் பேருக்கு அரசு பணி அளிக்கப்படும். தேயிலை தொழிலாளர்களின் அன்றாடக் கூலி 318 லிருந்து 365 என உயர்த்தப்படும்.
வீட்டில் உள்ள பெண்களுக்கு மாத உதவித்தொகை ரூ.2000 அளிக்கப்படும். 200 யூனிட் வரையிலான மின்சாரம் இலவசமாக்கி மாதம் ரூ.1400 சேமிக்க வகை செய்யப்படும்.’ எனத் தெரிவித்தார்.
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியிரிமை மீதான சட்டதிருத்தம்(சிஏஏ) அசாமிலும் பெரும் எதிர்ப்பிற்கு உள்ளாகி வருகிறது. இதை மனதில் கொண்ட பிரியங்கா, தம் கட்சியின் ஆட்சி வந்தால் சிஏஏ சட்டத்தை நீக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.
அசாமின் மிக முக்கியக் சக்தி பீடமாகக் கருதப்படும் காமக்யா கோயிலுக்கும் பிரியங்கா சென்று தரிசனம் செய்தார். இதுபோல், தேர்தல் பிரச்சாரத்திற்கு உத்தரப்பிரதேசத்திற்கு வெளியே முதன்முறையாக அசாம் வந்துள்ளார் பிரியங்கா.