காவிரி ஆற்றில் இருந்து உபரியாக வெளியேறும் நீரைக் கொண்டு காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதற்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா, முன்னாள் பிரதமர் தேவகவுடா, எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ‘‘கர்நாடக அரசின்ஒப்புதல் இல்லாமல் தொடங்கப்பட் டுள்ள காவிரி - குண்டாறு திட்டத்துக்கு மத்திய அரசிடம் தமிழகம் கொள்கை ரீதியான அனுமதி கேட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் 2018-ம்ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்புக்கு எதிரானது. மேலும் இந்தத் திட்டத்துக்கு தமிழகம் தேர்வு செய்துள்ள இடம் தவறானது. இந்த திட்டத்தால் மண்டியா மாவட்டமும், பெங்களூரு மாநகரமும் நேரடியாக பாதிக்கப்படும் என்று மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே மத்திய அரசு, தமிழக அரசின் இந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது. மேலும் இந்த திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி உள்ளார்.