சிறந்த தமிழறிஞரும் தெற்காசிய வரலாற்றாய்வாளருமான பேராசிரியர் நொபுரு கராஷிமா தனது 82-வது வயதில் டோக்கியோவில் கடந்த வியாழக்கிழமை காலமானார்.
இவரின் ஆய்வுகள், இடைக்கால தென்னிந்தியாவின் பொருளாதார, சமூக வரலாற்றை மாற்றியெழுதின. நொபுரு கராஷிமா தன் இறுதிக்காலம் வரை டோக்கியோ பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியர், டாய்ஷோ பல்கலைக்கழக இந்தியவியல் துறையின் சிறப்புப் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இந்திய-ஜப்பான் உறவுக் கட்டமைப்பில் சிறப்பான பங்களிப்புக்காக முனைவர் நொபுரு கராஷிமாவுக்கு இந்திய அரசு 2013-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது அறிவித்தது.
உடல்நலக் குறைவு காரணமாக, கராஷிமா இந்தியா வரவில்லை. இதையடுத்து, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான் சென்றிருந்தபோது, ஜப்பானில் வைத்தே அவ்விருதை நொபுரு கராஷிமாவுக்கு வழங்கி கவுரவித்தார்.
இந்தியப் பிரதமரைப் பார்த்ததும் கராஷிமா சொன்ன முதல் வார்த்தை தமிழில் ‘வணக்கம்’. பதிலுக்கு மன்மோகனும் வணக்கம் சொன்னார். விருதைப் பெற்ற பிறகு கராஷிமா சொன்ன வார்த்தை ‘நன்றி’. இந்தியப் பிரதமரை அயல் மண்ணில் தமிழில் வணக்கம் சொல்ல வைத்த தமிழ்ப்பற்றாளர் கராஷிமா.
சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்பு கராஷிமா வெளியிட்ட முதல் ஆய்வுக் கட்டுரை சுருக்கமானது. ஆனால், பெரும் விளைவுகளை ஏற்படுத்தியது. சோழர் கால கல்வெட்டில், காவேரிப் படுகையைச் சேர்ந்த அல்லூர், ஈசானமங்களம் ஆகிய இரு ஊர்களுக்கிடையே நிலப் பிரச்சினை தொடர்பான விவரம் இடம்பெற்றிருந்தது. அது தொடர்பாக ஆய்ந்து எழுதினார் கராஷிமா.
இடைக்கால தமிழகத்தில் நில உரிமை முறைகள், சமூக உறவுகளை ஆழமாக ஆய்வு செய்து வெளிக்கொணர இந்த ஆய்வு உந்துதலாக இருந்தது.
தென்னிந்திய வரலாற்றை அறிந்து கொள்வதற்கு ஏராளமான கல்வெட்டுகளிலிருந்து தேவையான தகவல்களைத் திரட்ட, புள்ளியியல் உத்தியை அவர் பயன்படுத்தினார். இதனால், நம்பகமான முடிவுகள் அவரின் ஆய்வில் வெளிப்பட்டன.
அவர் இறுதியாக எழுதிய நூல், ‘தென்னிந்தியாவின் சுருக்கமான வரலாறு’ கடந்த ஆண்டு வெளியானது.
உலகத் தமிழராய்ச்சி மன்றம் அமைக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்தார். 1989 முதல் 2010-ம் ஆண்டு வரை அதன் தலைவராக இருந்தார்.
தஞ்சாவூரில் 1995-ம் ஆண்டு நடைபெற்ற 8-வது உலகத் தமிழ் மாநாட்டின் முதன்மை ஒருங்கிணைப்பாளராக இருந்தார். உலகத் தமிழ் மாநாடுகளில் அரசியல் கலந்ததையடுத்து, 9-வது உலகத் தமிழ் மாநாடு நடத்துவதிலிருந்து விலகியே இருந்தார்.
1996 முதல் 2000-வரை தெற்காசிய ஆய்வுகளுக்கான ஜப்பானிய சங்கத்தின் தலைவராக இருந்தார். தற்போதும் துடிப்புடன் செயல்பட்டு வரும் இத்துறை சிறப்பாக கட்டமைக்கப்படுவதற்கு பேருதவி புரிந்துள்ளார்.
தெற்காசிய கலாச்சாரம் மற்றும் உணவுகள் தொடர்பாக உரையாற்றுவதன் மூலம் ஜப்பான் தொலைக்காட்சிகளில் இவர் மிகவும் பிரபலம்.
இந்தியா மீது குறிப்பாக தமிழகத்தின் மீது மிகுந்த ஈடுபாடும் பற்றும் கொண்டவரான கராஷிமா, இந்தியா மற்றும் ஜப்பானில் ஒரு தலைமுறை தமிழறிஞர்கள் மீது வலிமையான அறிவுசார் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
கராஷிமாவுக்கு டகாகோ என்ற மனைவி, மூன்று மகன்கள், மூன்று பேரக் குழந்தைகள் உள்ளனர். டகாகோ கராஷிமா எழுதிய இந்தியா தொடர்பான புத்தகம் பல பதிப்புகளைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.