இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இதற்கு கரோனா உருமாற்றம் காரணமா என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் விளக்கம் அளித்துள்ளார்.
நாடுமுழுவதும் கரோனா பரவலை கட்டப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஏறக்குறைய ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்து, இயல்பு நிலையும் திரும்பி வருகிறது.
இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், மத்தியபிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
சிகிச்சை பெறுபவர்களில் 74 சதவீதத்துக்கும் அதிகமானோர், கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ளனர். சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களில், தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. அங்கு பிப்ரவரி 9-ம் தேதி வரை தினசரி பாதிப்பு என்பது சராசரியாக 2489 பேர் என்ற அளவில் இருந்தது. ஆனால் பிப்ரவரி 10-ம் தேதிக்கு பிறகு நிலைமை மாறத் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 10 நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கேரளா உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில், ஆர்டி-பிசிஆர் சோதனைகளை அதிகப்படுத்தி, கரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா தொற்று குறித்து ஆய்வு செய்வதற்கு தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு உதவ உயர்மட்ட பன்னோக்கு நிபுணர் குழுவையும் மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்த குழுவினர் கரோனா உருமாறியுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய சுகாதரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் கூறியதாவது:
இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து மத்திய குழு ஆய்வு செய்துள்ளது. தமிழகம், கேரளம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப், கர்நாடகம், மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கும், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கும் இந்த குழுவினர் சென்று ஆய்வு செய்தனர்.
இதற்கு கரோனா உருமாற்றம் காரணம் அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளும், இந்திய மருத்தவ கவுன்சிலும் இதனை உறுதிப்படுத்தி விட்டது. கரோனா பரவலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளோம். தொடர்ந்து மாநில அரசுகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.