ஒரு கலாச்சாரம், ஒரு தேசம், ஒரு வரலாறு எனப் பேசும் பாஜகவை வெளியேற்றி, தமிழக மக்கள் தேசத்துக்கே வழிகாட்ட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசினார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக, கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக, வேட்பாளர் தேர்விலும், கூட்டணியை அமைப்பதிலும் ஈடுபட்டு வருகின்றன.
இந்தத் தேர்தலையொட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தமிழகத்துக்குப் பயணித்துள்ளார். கடந்த இரு நாட்களாகத் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
நாகர்கோவிலில் இன்று நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியதாவது:
''தமிழகத்தின் வரலாற்றில் தமிழகத்தை இதுவரை தமிழக மக்களைத் தவிர வேறு எந்த மக்களும் ஆளவில்லை என்பதைக் காட்டுகிறது. இந்தத் தேர்தலும் இதைத்தான் உணர்த்த வேண்டும். தமிழக மக்களை உண்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர்தான் தமிழக முதல்வராக வர வேண்டும்.
ஆனால், தற்போது தமிழக முதல்வராக இருக்கும் எடப்பாடி கே.பழனிசாமி, பிரதமர் மோடிக்கு அடிபணிந்து நடக்கிறார். தமிழக முதல்வராக ஒருபோதும் தமிழக மக்களின் பிரதிநிதியாக இருக்க முடியாது. முதல்வர் என்பவர் மாநில மக்களுக்குப் பணிந்து நடக்க வேண்டும்.
ஆர்எஸ்எஸ் அமைப்பும், பிரதமர் மோடியும் தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் அவமதிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை இந்த மண்ணில் தடம் பதிக்க அனுமதிக்கக் கூடாது.
பிரதமர் மோடி, ஒரு கலாச்சாரம், ஒரு தேசம், ஒரு வரலாறு, ஒருதேசம் எனப் பேசுகிறார். அப்படியென்றால், தமிழ் மொழி இந்திய மொழி இல்லையா? வங்க மொழி இந்திய மொழி இல்லையா? தமிழ்க் கலாச்சாரம் இந்தியக் கலாச்சாரத்தில் இல்லையா? இந்தத் தேர்தலில் இந்தப் போர்தான் நடக்கிறது.
தமிழ்க் கலாச்சாரத்தையும், மொழியையும் வரலாற்றை மட்டும் காப்பது என்கடமை மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மொழிகளையும், மதங்களையும் காப்பதும் எனது கடமையாகக் கருதுகிறேன்.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசும், தமிழகத்தில் ஆளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும், தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் மதிக்கவில்லை. மோடி என்ன சொல்கிறாரோ அதைச் செய்யக்கூடிய முதல்வர்தான் உங்களுக்குக் கிடைத்துள்ளார். பிரதமர் மோடி என்ன சொல்கிறாரோ, விரும்புகிறாரா அதை பிரதிபலிப்பதாகவே முதல்வர் இருக்கிறார். தமிழக மக்கள் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக இல்லை''.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்துக்குப் பின், கன்னியாகுமரியில் உள்ள மறைந்த காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் நினைவிடத்துக்குச் சென்று ராகுல் அஞ்சலி செலுத்த உள்ளார்.