கேரள உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற இரு நீதிபதிகளான பி.என்.ரவீந்திரன், வி.சிதம்பரேஷ் ஆகியோர் பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
கேரளாவில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி கடுமையாகப் போராடி வருகிறது. இழந்த ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி திட்டம் தீட்டி வருகிறது. இதற்கிடையே பாஜகவும் தனக்குரிய இடத்தைப் பிடிக்கத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது.
கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடக்கிறது. மொத்தம் 2.67 கோடிக்கும் மேலான வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலை விட, இந்த முறை வாக்குப்பதிவு மையங்கள் 40,771 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில் பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் தலைமையில், விஜய யாத்திரை பிரச்சாரம் நடந்து வருகிறது. கொச்சியில் உள்ள திருப்புனித்துராவில் நேற்று பிரச்சாரத்தில் சுரேந்திரன் இருந்தபோது, முன்னாள் நீதிபதிகள் ரவீந்திரன், சிதம்பரேஷ் இருவரும் பாஜகவில் முறைப்படி இணைந்தனர்.
இதில் முன்னாள் நீதிபதி ரவீந்திரன் கடந்த 2007 முதல் 2018-ம் ஆண்டுவரை கேரள உயர் நீதிமன்றத்தில் பணியாற்றினார். சிதம்பரேஷ் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டுவரை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
கடந்த மாதம் கேரள உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.கேமல் பாஷா தானும் அரசியலில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்திருந்தார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இணையப் போவதாகத் தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்தால், எர்ணாகுளம் தொகுதியில் போட்டியிடுவேன் என பாஷா தெரிவித்திருந்தார். கேரள உயர் நீதிமன்றத்தில் கடந்த 2013 முதல் 2018-ம் ஆண்டுவரை பாஷா நீதிபதியாக இருந்தார்.
இந்த மூன்று நீதிபதிகளுமே ஓய்வுக்குப் பின் பல்வேறு காலகட்டங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி, நாளேடுகளில் செய்தியாக வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முன்னாள் நீதிபதி பாஷா கடந்த 2018-ம் ஆண்டு அளித்த பேட்டியில், நீதிபதிகளை நியமிக்கும் உச்ச நீதிமன்ற கொலிஜியம் குறித்து விமர்சித்தது சர்ச்சையானது நினைவுகூரத்தக்கது.