பிரதமர் நரேந்திர மோடிக்கு புதுச்சேரியைச் சேர்ந்த செவிலி நிவேதா தடுப்பூசி செலுத்தினார்.
கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் நாடுமுழுவதும் முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் முடியும் தறுவாயில் இருப்பதையடுத்து, 2-வது கட்டமாக மார்ச் 1ம் தேதியான இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர் 59 வயதுக்குள் இருக்கும் இணை நோய்கள் கொண்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
இதில் நீரிழிவு நோய்கள், கடந்த ஓராண்டாக இதயக்கோளாறு நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் உள்ளிட்ட 20 இணை நோய்கள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி நாடுமுழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் தகுதி படைத்தவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கரோனா தடுப்பூசி முதல் டோஸை பெற்றுக் கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு புதுச்சேரியைச் சேர்ந்த செவிலி நிவேதா தடுப்பூசி செலுத்தினார். கேரளாவைச் சேர்ந்த செவிலி ரோசம்மா அவருக்கு உதவி செய்தார். பிரதமருக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தில் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவனைமயில் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றும் புதுச்சேரியை சேர்ந்த செவிலி பி.நிவேதா பிரதமர் மோடிக்கு தடுப்பூசியை செலுத்தினார். நிவேதா அதுபற்றி கூறியதாவது:
எய்ம்ஸ் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் பிரிவில் நான் கடந்த சில நாட்களாகவே பணியாற்றி வருகிறேன். இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என எங்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பணிக்கு வந்தபோது பிரதமர் வந்திருப்பது தெரிய வந்தது. ஆச்சரியப்பட்டோம்.
பிரதமருக்கு தடுப்பூசி செலுத்தும்போது அவர் ‘‘ஊசியை செலுத்துங்கள்’’ என்றார். அப்போது ‘‘தடுப்பூசி போட்டப்பட்டு விட்டது’’ என்றேன். அதற்கு அவர் ‘‘அப்படியா, தடுப்பூசி போட்டதே தெரியவில்லையே’’ என்றார்.
பின்னர் நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர் என பிரதமர் என்னிடம் கேட்டார். பிரதமருக்கு 28 நாட்கள் கழித்து அடுத்த டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
இவ்வாறு செவிலி நிவேதா கூறினார்.