இந்தியா

பிரதமர் மோடி என்றுமே தனது சுயத்தை மறைத்ததில்லை: கசிந்துருகிய குலாம் நபி ஆசாத்; கலக்கத்தில் காங்கிரஸ்

ஏஎன்ஐ

பிரதமர் நரேந்திர மோடி என்றைக்குமே தனது சுயத்தை மறைத்ததில்லை. அவருடைய இந்தப் பண்பை நான் பாராட்டுகிறேன் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் பேசியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட குலாம் நபி ஆசாத் இவ்வாறு பேசினார்.

முன்னதாக சனிக்கிழமையன்று ஜி-23 என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஜம்மு-காஷ்மீரில் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைமை குறித்து பல்வேறு கேள்விகளை அவர்கள் எழுப்பினர். இந்நிலையில், குலாம் நபி ஆசாத்தின் பேச்சு அதீத முக்கியத்துவம் பெறுகிறது.

அவர் பேசியதாவது:

"நம் தேசத்தின் தலைவர்கள் பலரிடம் பல நல்ல விஷயங்களை நான் கண்டு ரசித்திருக்கிறேன். சிலவற்றை பின்பற்றியிருக்கிறேன். நான் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். அதில் எனக்கு எப்போதுமே பெருமை. அதேபோல், நமது பிரதமர் மோடி போன்றோரை நான் என்றைக்குமே பெருமையுடன் பார்க்கிறேன். ஒரு கிராமத்தில் தேநீர் விற்றுக்கொண்டிருந்தவர் பிரதமரானார். ஆனால் அவர் அதை என்றுமே மறைத்ததில்லை. நாங்கள் அரசியல் சித்தாந்தம் ரீதியாக எதிரிகளாக இருக்கலாம். ஆனால், அவரது சுயத்தை மறைக்காத பண்பை நான் வெகுவாகப் பாராட்டுகிறேன். ஆனால், சில அரசியல்வாதிகள் மாயையில் வாழ்கின்றனர். ஒரு மனிதர் எபோதும் அவரது சுயத்தை சிலாகிக்க வேண்டும். நான் பல நாடுகளுக்குப் பயனப்பட்டிருக்கிறேன். 5 நட்சத்திர, 7 நட்சத்திர விடுதிகளில் தங்கியிருக்கிறேன். ஆனால், என் சொந்த கிராமத்தில் என் மக்களுடன் நான் இருக்கும்போது தனித்துவமாக உணர்கிறேன்" எனப் பேசினார்.

அன்று புகழ்ந்த பிரதமர்:

முன்னதாக கடந்த பிப்ரவரி 9ம் தேதி, குலாம் நபி ஆசாத்தின் ஓய்வு பற்றி பிரதமர் மோடி, "நீங்கள் ஓய்வு பெற நான் அனுமதிக்க மாட்டேன். நான் எப்போதும் உங்களிடமிருந்து அறிவுரைகளைப் பெறுவேன். எனது கதவுகள் எப்போதும் தங்களுக்காகத் திறந்திருக்கும்" என்றுப் பேசியிருந்தார்.

கலக்கத்தில் காங்கிரஸ்..

குலாம் நபி ஆசாத்தின் பேச்சு காங்கிரஸ் தலைமையில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் இரண்டு நாட்களுக்கு முன் பேசிய கட்சியின் மூத்தத் தலைவர்கள் காங்கிரஸ் கட்சி வலுவிழந்து வருவதாகவும் தங்களைப் போன்ற மூத்த தலைவர்களாலேயே கட்சியை வலுப்படுத்த முடியும் என்றும் பேசியிருந்தனர். அதுவும் குறிப்பாக கபில் சிபல் பேசும்போது, குலாம் நபி ஆசாத்தை கட்சி குறைத்து மதிப்பிடுவது சரியல்ல என்று எச்சரித்திருந்தார்.

ஜி23 கூட்டத்தில் கலந்து கொண்ட அதிருப்தி தலைவர்கள் அனைவருமே காங்கிரஸ் இடக்கால தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில், கட்சிக்கு நிரந்தர, முழுநேர தலைமை வேண்டும் என வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT