புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டுவதற்காக உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நேற்று நடைபெற்ற மகா பஞ்சாயத்துக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிகைத். படம்: பிடிஐ 
இந்தியா

விவசாயிகள் போராட்ட தலைவர் டிகைத்தின் உரையை 4 மொழியில் வெளியிட திட்டம்

ஆர்.ஷபிமுன்னா

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அமைதியான இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதில் மிகப் பெரிய வன்முறை வெடித்தது.

செங்கோட்டையில் அத்துமீறி சீக்கியர்களின் மதக்கொடி ஏற்றப்பட்டது. இதனால் போராட்டம் திசை திரும்பியதால் விவசாயிகள் வீடு திரும்பத் தொடங்கினர்.

குறிப்பாக டெல்லியின் உ.பி.எல்லையான காஜிபூரின் போராட்டக் களம் காலியானது. இதன் பின்னணியில் மத்திய அரசின் சதிஇருப்பதாக, அங்கு போராட்டத்துக்கு தலைமை வகித்த பாரதியகிசான் யூனியன் தலைவர் ராகேஷ்டிகைத் புகார் கூறினார். விவசாயிகளை மத்திய அரசு நசுக்கப் பார்ப்பதாகவும், வேளாண் சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால் உயிரை மாய்த்துக் கொள்ளவதாகவும் ஆவேசப்பட்டார்.

போராட்டத்துக்கு திரும்பும்படி விவசாயிகளிடம் அவர் கண்ணீர்மல்க கூறியது அவர்களின் மனதை மாற்றியது. ஜனவரி 28 -ம் தேதி இந்த உரை சமூக வலைதளங்களில் வைரலாகி, உ.பி. விவசாயிகள் காஜிபூர் போராட்டக் களத்தில் மீண்டும் குவிந்தனர். இந்நிலையில் டிகைத்தின் இந்தஆவேச உரையை மற்ற மாநில மொழிகளிலும் வெளியிட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் காஜிபூர் போராட்டக் குழுவின் செய்தி தொடர்பாளர் ஜக்தார்சிங் பாஜ்வா கூறும்போது, “டெல்லியில் தொடங்கிய போராட்டத்துக்கு மற்ற மாநில விவசாயிகளும் ஆதரவளித்து வருகின்றனர்.

ஆனால் அவர்களில் பலருக்கும் மொழிப் பிரச்சினை ஒரு தடையாக இருப்பதால் டிகைத்தின் உரையை மொழிபெயர்த்து வெளியிட உள்ளோம். முதலில் ஆங்கிலத்திலும் பிறகு மற்ற மொழிகளிலும் அவரது உரை வெளியிடப்படும்” என்றார்.

விவசாயிகளுக்கு ஆதரவு திரட்டுவதற்கு 5 மாநிலங்களுக்கு டிகைத் பயணம்

காஸியாபாத்: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை தீவிரப்படுத்தி மற்ற மாநிலங்களுக்கு விரிவுப்படுத்தும் நடவடிக்கையில் விவசாய சங்கங்கள் ஈடுபட்டுள்ளன.

குறிப்பாக, விவசாயிகள் போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் பாரதிய கிசான் யூனியனின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிகைத், இந்தப் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளார். அதன்படி, தற்போது பல்வேறு மாநிலங்களுக்கு சென்று மகா பஞ்சாயத்து என்ற பெயரில் கூட்டங்களை நடத்தி விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில், மார்ச் மாதம் முதலாக உத்தராகண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களில் ராகேஷ் டிகைத் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு கோரவுள்ளதாக பாரதிய கிசான் யூனியன் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT