பிஹாரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை உயர்வு பற்றி பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
பிஹாரில் 5-வது மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் இம்மாநிலத்தின் அராரியா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:
மக்களவைத் தேர்தலின் போது, அத்தியாவசியப் பொருட் களின் விலையை குறைப்பேன் என்று நரேந்திர மோடி கூறினார். ஆனால் ரூ.70-க்கு விற்ற 1 கிலோ பருப்பு தற்போது ரூ.200 ஆக உயர்ந்துள்ளது.
மோடி பதவிக்கு வந்த பின் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைவதற்கு பதிலாக அதிகரித்துள்ளது. இதற்கு பிரதமர் மோடியே பொறுப்பு ஆவார். ஆனால் அவர் அமைதி காப்பது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
ஏழைகளிடமிருந்து பருப்பு, ரொட்டி மற்றும் அரிசியை மோடி அரசு பறித்துள்ளது. மக்களின் பிரச்சினைகள் பற்றி அரசு பேச மறுக்கிறது. ஏழை மக்கள் அரசை சபிக்கின்றனர். ஏழைகள் பற்றி பேசிய மோடி, அவர்களின் வாழ்க்கையை கடினமாக்கிவிட்டார்.
எனவே விரைவில் இந்த ஆட்சியின் 5 ஆண்டுகாலம் முடிவடைந்து விடும், காங்கிரஸ் அரியணையில் ஏறும்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்றார், உங்களில் யாருக்காவது வேலை கிடைத்ததா? கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் வைக்கப்படும் என்றார், செய்தாரா?” என்றார் ராகுல்.
வி.கே.சிங் மீது தாக்கு:
நாய் மீது கல்லெறிந்தால் கூட மத்திய அரசைக் குறைகூறுவதா என்று வி.கே.சிங் தலித் குழந்தைகள் கொலை குறித்து பேசியதைக் கண்டித்த ராகுல், ‘2 குழந்தைகள் நாய்கள் அல்ல. அவர்கள் நாட்டின் குடிமக்கள். இந்தியாவின் எதிர்காலம் அவர்கள்’ என்றார்.
மேக் இன் இந்தியா:
மேக் இன் இந்தியா திட்டம் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதில் தோல்வி அடைந்துள்ளது. மோடியின் நண்பர்களுக்கு ஒப்பந்தம் கிடைத்ததுதான் அதில் நடந்தது.
காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சியே ஏற்படவில்லை என்கிறார் பிரதமர், இவ்வாறு கூறும்போது அவர் காங்கிரஸை விமர்சிக்கவில்லை, மாறாக தேசத்தின் ஆற்றலையே கேள்விக்குட்படுத்துகிறார்.
இவ்வாறு கூறினார் ராகுல் காந்தி.