கரோனா பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் நடுவே இருக்கிறோம், அங்கிருந்து இருந்து வரும் மாணவர்களால் கரோனா பரவி வருகிறது என கர்நாடகா புகார் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் தற்போதுதான் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கரோனா பாதிப்பு ஒரு கோடியைக் கடந்தது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எட்டு லட்சத்தைக் கடந்தது. அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக கரோனா தொற்று பெரும் அளவில் குறைக்கப்பட்டது.
இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், மத்தியபிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
சிகிச்சை பெறுபவர்களில் 74 சதவீதத்துக்கும் அதிகமானோர், கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ளனர். சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களில், தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது.
இதனால் மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதலான கண்காணிப்பு அறிவுறுத்தல்களை அறிவித்துள்ளது. கரோனா பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் இருந்து வருபவர்களால் தங்கள் மாநிலத்திலும் கரோனா பரவல் அதிகரித்துள்ளதாக கர்நாடக அரசு புகார் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநில கரோன தடுப்பு நடவடிக்கை பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
‘‘கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக புதிய இடங்களில் கரோனா பரவி வருகிறது. கரோனா பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் நடுவே இருக்கிறோம். அந்த இரு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கர்நாடகா வருகின்றனர். அவர்கள் மூலமாக இங்குள்ள மாணவர்களுக்கும் கரோனா பரவுகிறது. இரு மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம்.’’ எனக் கூறினார்.