பிரேசில் நாட்டின் செயற்கைக்கோள் உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களைச் சுமந்துகொண்டு ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவண் விண்வெளி நிலையத்திலிருந்து பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது.
2021-ம் ஆண்டில் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பும் முதல் ராக்கெட் இதுவாகும். பிரேசில் நாட்டின் அமேசானியா-1 மிஷன் செயற்கைக்கோளை முதல் முறையாக இஸ்ரோ விண்ணுக்குச் செலுத்துகிறது.
18 செயற்கைக்கோள்களில் 4 செயற்கைக்கோள்கள் இஸ்ரோவின் ஸ்பேஸ் புரமோஷன் அண்ட் ஆத்தரஷேசன் அமைப்புக்கும், 14 செயற்கைக்கோள்கள் என்எஸ்ஐஎல் அமைப்புக்கும் சொந்தமானவையாகும்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 10.24 மணிக்கு விண்ணில் பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட் செலுத்தப்படுவதற்கான கவுண்ட் டவுன் இன்று 8.54 மணிக்குத் தொடங்கியது.
இந்த பிஎஸ்எல்வி-51 ராக்கெட் மூலம் பிரேசிலின் அமேசானியா செயற்கைக்கோள் மட்டுமின்றி, சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் எஸ்டி சாட் செயற்கைக்கோள் உள்ளிட்ட19 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட உள்ளன.
இஸ்ரோ நிறுவனத்தின் வர்த்தகப்பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிட்(என்எஸ்ஐஎல்) சார்பில் முதல் முறையாக பிரேசில் நாட்டின் செயற்கைக்கோள் ஏவப்படுகிறது.
இதுகுறித்து என்எஸ்ஐஎல் நிறுவன இயக்குநர் ஜி.நாராயணன் கூறுகையில், "பிரேசில் செயற்கைக்கோள் செலுத்தப்படுவதைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறோம். பிரேசிலில் உருவாக்கப்பட்ட முதல் செயற்கைக்கோளை இந்தியா செலுத்துவது பெருமை. இந்த செயற்கைக்கோள் 637 கிலோ எடை கொண்டதாகும். அமேசான் காடுகளின் சூழல், காடுகளை யார் அழிக்கிறார்கள், பிரேசில் நாட்டின் வேளாண் சூழல் ஆகியவற்றை ஆய்வு செய்ய இந்த செயற்கைக்கோள் பயன்படும்" எனத் தெரிவித்தார்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊடகத்தினருக்கு நாளை அனுமதியில்லை. ராக்கெட் ஏவும் காட்சிகளை இஸ்ரோ யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவை மூலம் நேரலை செய்யப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.